பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக வேதனை தெரிவித்தார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என்றும், நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் கதாபாத்திரங்கள் ஊடே பயணிக்கும் நெய்வேலி, அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் பாய்ந்து ஓடும் அழகை மறக்க முடியாது என குறிப்பிட்ட அவர், அந்த இடங்கள் எல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், வழக்கின் விசாரனையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாமகவினர் மீது காவல்துறை தடியடி: வேல்முருகன் கண்டனம்!
சேலத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த பாமகவினர்!