அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயண துவக்க விழா ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,தேமுதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜான் பாண்டியன், ஜேகே சார்பில் ரவி பச்சமுத்து , இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, இந்திய தேசத்தின் வரைபடத்தில் ராமேஸ்வரம் கடைசி இடத்தில் இருந்தாலும் அமித்ஷா வருகையால் உலகத்தின் பார்வைக்கு சென்றுள்ளது.
தமிழகம் ஆன்மிக பூமி. இங்கு தெருவுக்கு ஒரு கோவில் உள்ளது. கோவில்களுக்கு ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டு வரும் தமிழகத்தில் பாஜக சார்பில் அரசியலுக்காக அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இது ஒரு நியாயமான நடைபயணம்.
சர்தார் வல்லபாய் பட்டேல் போல வாழும் இரும்பு மனிதராக அமித்ஷா உள்ளார். கரும்பு மனிதராக உள்ள அண்ணாமலை நடைபயணத்தை துவங்கி வைக்க வந்துள்ளார். தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அண்ணாமலை நடைபயணத்திற்கு வாழ்த்துக்களை சொல்வதற்காக வந்துள்ளேன்.
உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சியடைய செய்திருக்கிறார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவ கல்லூரிகள் கொடுத்தது பாஜக அரசு தான்.
அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை நடைபயணம் முடியும் போது திமுக ஆட்சி வீட்டிற்கு செல்லும்” என்றார்
செல்வம்
என்.எல்.சி விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
பாமகவினர் மீது காவல்துறை தடியடி: வேல்முருகன் கண்டனம்!