பொன்முடியின் அமைச்சர் பதவி யாருக்கு?

அரசியல்

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது விடுதலையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. நாளை (21ஆம் தேதி) தண்டனை விவரங்களை   தெரிவிக்க உள்ளது.

அமைச்சருக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அதன் பிறகு என்ன நடக்கும்? அவர் அமைச்சர் பதவியை இழக்கும் பட்சத்தில்  அடுத்த உயர்க்கல்வித் துறை அமைச்சர் யார்? என்ற பேச்சுகள் திமுகவுக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, “அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்படும் தண்டனை எந்த அளவில் இருந்தாலும் சட்டப்படியோ அல்லது தார்மீக அடிப்படையிலோ அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது சாத்தியமில்லை.

பொன்முடி உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருவேளை அவருடைய  பிரதிநிதித்துவம் அமைச்சரவையில்  இல்லை எனும் பட்சத்தில், அதே சமூகத்தைச் சேர்ந்த வேறு யாருக்காவது அமைச்சர் பதவி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சவுந்தர பாண்டியன்

அதன்படி பார்த்தால் உடையார் சமுதாயத்தில், திருச்சி மாவட்டம் லால்குடி எம்.எல்.ஏ சவுந்தர பாண்டியன் இருக்கிறார். தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆனால்  ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இருக்கிறார்கள்.

சமுதாய பிரநிதித்துவப்படி  லால்குடி சவுந்தர பாண்டியனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இருந்தாலும்,  திருச்சி மாவட்டத்தில் இருந்து இரு அமைச்சர்கள் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகத்தான் பார்க்கப்படுகிறது.

இ.கருணாநிதி

பல்லாவரம் எம்.எல்.ஏ.வான  இ.கருணாநிதியும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஆனால், ஏற்கனவே சென்னையில் உதயநிதி ஸ்டாலின்,  மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சென்னையை ஒட்டிய இவரது செங்கல்பட்டு  மாவட்டத்துக்கு பக்கத்து மாவட்டமான காஞ்சியில் இருந்து  தா.மோ.அன்பரசன் அமைச்சராக இருப்பதால் இ.கருணாநிதிக்கு அமைச்சர் யோகம் அடிக்குமா என்பது சந்தேகம்தான்.

வசந்தம் கார்த்திகேயன்

இந்த வரிசையில் பொன்முடியின்  வட்டாரத்தைச் சேர்ந்த வசந்தம் கார்த்திகேயனும் இருக்கிறார்.  சில வருடங்களுக்கு முன்பு வரை விழுப்புரம் மாவட்டமாக இருந்து, இப்போது கள்ளக்குறிச்சி மாவட்டமாக  பிரிந்திருக்கும் நிலையில், அம்மாவட்டத்துக்கு உட்பட்ட  ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான வசந்தம் கார்த்திகேயனும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். மற்றவர்கள் திருச்சி, சென்னை என இருக்கும் நிலையில் பொன்முடியின் மாவட்டத்துக் காரர், பொன்முடியின் சமுதாயத்துக்காரர் என்ற வகையில் வசந்தத்தின் பெயரும் இந்த பட்டியலில் பேசப்படுகிறது. இவரும் இப்போது இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவர்கள் மூன்று பேர்தான் உடையார் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். சமுதாய பிரநிதித்துவம் என்ற அடிப்படையில்  அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால் இவர்களில் ஒருவருக்கு வாய்ப்புண்டு” என்கிறார்கள் சில திமுக நிர்வாகிகள்.

திமுக நிர்வாகிகளிடையே இப்படி ஒரு பேச்சு எழுந்துள்ள நிலையில், பொன்முடிக்கு நெருக்கமான அவரது குடும்ப நண்பர்கள் வேறொரு காய் நகர்த்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை பொன்முடி அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு, அவரது தொகுதியான திருக்கோவிலூர்  தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.  இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பொன்முடியின் மகனும்,  தற்போதைய  கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான  கவுதம சிகாமணியை நிறுத்தி வெற்றி பெறவைத்து, அவரையே அமைச்சராக்க வேண்டும் என்பதுதான் பொன்முடியின் குடும்ப நண்பர்களின் கணக்கு.  இதை தலைமையிடம் கொண்டு செல்லவும் அவர்கள்  முயற்சித்து வருகிறார்கள்.

திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது, “இப்போதைய சூழலில்  அமைச்சரவை விரிவாக்கத்துக்கோ, மாற்றத்துக்கோ முதல்வர் தயாராக இருக்கிறாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. பொன்முடி பதவி இழக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கையாக  அவரது உயர் கல்வித் துறை  வேறு  ஒரு அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாக  ஒதுக்கப்படக்கூடும். ஏற்கனவே  செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றபோது அவரிடம் இருந்த  மதுவிலக்கு, மின்சாரம் ஆகிய இரு முக்கிய துறைகள்  கூடுதல் பொறுப்புகளாக  முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு கொடுக்கப்பட்டன.  எனவே அதே ஃபார்முலாவையே இப்போது பின்பற்ற வாய்ப்புகள் அதிகம்.  இருந்தாலும் அமைச்சரவையில் யாரை  சேர்ப்பது என்பது முதலமைச்சரின் பிரத்யேக உரிமை என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”  என்கிறார்கள்.

இந்தசூழலில் நாளை எந்தமாதிரியான தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன், பிரியா

2 வருஷத்துக்கு பின் வெளியான அயலான் செகண்ட் சிங்கிள்!

நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *