|

சோழன் முதல் ஸ்டாலின் வரை: திமுகவில் இடங்கை, வலங்கை போராட்டம்! – மினி தொடர் – 9

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9

-ஆரா

திமுகவில் நடக்கும் மாற்றங்களைப் பற்றிப் பேசிவரும் இந்த மினி தொடரைப் படித்துவிட்டு திமுகவின் துடிப்பான இளைஞர் ஒருவர் அலைபேசினார்.

“தலைவர் ஸ்டாலின் திமுகவுக்குள் கையாள வேண்டிய உத்தியை பொன்னியின் செல்வனில் கல்கியே சொல்லியிருக்கிறார். அதை ஏற்கனவே கலைஞர் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். ஸ்டாலினும் அதையே பின்பற்றினால் கட்சி தடம்புரள்வதில் இருந்து தப்பித்து சீராக நடைபோடும்” என்றார் எதையுமே வரலாற்றுக் கண் கொண்டு பார்க்கும் அந்த வட மாவட்ட இளைஞர்.

திமுக ஒரு தேர்தல் களமாடும் கட்சி. அனைத்துப் பகுதியினரையும், அனைத்து சமுதாயத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய ஓர் பொது இயக்கம் திமுக. அதனால் தலைவர் பதவியில் இருப்பவர் அத்தனை பேரையும் அனுசரிக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பார்வையை சோழனில் இருந்து சொல்லத் தொடங்கினார் அந்த இளைஞர்.

தஞ்சையில் சோழ மன்னனின் அரண்மனையில் பாதுகாப்புப் பணிக்காக இரு வகை வீரர்கள் நியமிக்கப்பட்டார்கள். வலங்கை வீரர்கள், இடங்கை வீரர்கள் என்று அழைக்கப்பட்டனர் அவர்கள். வலங்கை வீரர்கள் என்றால் புலமைபெற்றவர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள் போன்ற மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்கள். இடங்கை வீரர்கள் என்றால் உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் கோட்டையின் பாதுகாப்புப் பணி, இப்போது ஷிப்டு என்று சொல்கிறோமே அதுபோல மாறும். ஒவ்வொரு நாள் சூரிய அஸ்தனமத்தின் போதும் இந்தப் பணி மாறும்.

வலங்கை வீரர்களிடம் இருந்து கோட்டைப் பணிகளை இடங்கை வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள். மீண்டும் நாளை சூரிய அஸ்தமனத்தின் போது இடங்கை வீரர்களிடம் இருந்து வலங்கை வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

தஞ்சை சோழனின் கோட்டையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறை இது. பிற்காலத்தில் வடங்கை, இடங்கை பாகுபாடு என்பதுதான் சாதித் தொகுப்புகளாக மாற்றம் பெற்றது என்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்.

ஏன் ஒவ்வொரு நாளும் கோட்டையில் இடங்கை வீரர்களையும், வலங்கை வீரர்களையும் மாற்றி மாற்றி பணியில் அமர்த்தினான் சோழ மன்னன்?

அறிந்துகொண்டால் ஆச்சரியப்படுவோம்.

What is Happening in DMK Mini Series 9

எந்த ஒரு படைப் பிரிவும், எந்த ஒரு குழுவும், எந்த ஒரு கூட்டமும் அரசனைச் சுற்றி தொடர்ந்து ஓர் இரவுக்கு மேல் இருந்தால் என்ன விளைவுகள் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதாவது, ‘கோட்டையே எங்கள் பாதுகாப்பில்தான் இருக்கிறது. அரசனைச் சுற்றி நாங்கள்தான் இருக்கிறோம். அதனால் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்’’ என்று குறிப்பிட்ட அந்தக் குழு தன் செல்வாக்கைக் காட்ட முயற்சிக்கலாம். அதனால் இன்று இரவு வலங்கை என்றால் நாளை இரவு இடங்கை என்று தஞ்சை கோட்டையின் காப்புப் பணி மாறிக் கொண்டே இருந்தது. இப்படி மாற்றுவதன் மூலம் யார் தீவிரமாகப் பாதுகாக்கிறார்கள் என்ற போட்டி உணர்வும் வந்தது. இதனால் இரு தரப்புமே தீவிரமாக உழைத்தார்கள்.

இந்த சோழ மன்னரின் சூத்திரத்தை மிக ஆழமாக பின்பற்றியவர் கலைஞர். மன்னராட்சிக்குப் பொருந்திய அந்த சூத்திரம் மக்களாட்சிக்கும், கட்சி நிர்வாகத்துக்கும் கூட சாலப் பொருந்துவதுதான் காரணம்.

திமுகவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு கோஷ்டிகள் இருந்தாலும், இரண்டும் திமுகதான். இரண்டின் தலைவர் திமுக தலைவர்தான். ஒரு குறிப்பிட்ட கோஷ்டியே தலைவரைச் சுற்றி இருக்கிறது என்ற எண்ணம் இன்னொரு கோஷ்டிக்கு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வார் கலைஞர். இருவருக்கும் தக்க பிரதிநிதித்துவத்தை வழங்குவார். இதையும் மீறி ஏதேனும் ஒரு கோஷ்டிக்கு அந்த எண்ணம் ஏற்பட்டால், தானே அந்த மாவட்டச் செயலாளரைக் கூப்பிட்டுப் பேசுவார். அந்த மாவட்டச் செயலாளர் யாரோடு மிக அதிக எதிர்ப்பு காட்டுகிறாரோ அந்த ஆளுமையை அழைத்துப் பேசி அந்தப் படத்தை முரசொலியில் வரவைப்பார். மேடையேற்றி உரையாடுவார்.

அதன் மூலம் மா.செ.வால் புறக்கணிக்கப்பட்டவருக்கு கட்சிக் காரர்கள் மத்தியில் ஒரு கவனிப்பு கிடைக்கும். ‘தலைவர் என்ன பண்றாரு’ என்று மாவட்டச் செயலாளருக்குள் ஒரு தடதடப்பு நடக்கும். ஆக இருவரிடமுமே பொறுப்புணர்ச்சியோடு கூடிய ஒரு பதற்றத்தைக் கலைஞர் உண்டாக்குவார்.

What is Happening in DMK Mini Series 9

ஆனால் இன்று திமுக தலைவரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் மட்டுமே இருப்பதான எண்ணம் திமுகவுக்குள் திரண்டு கொண்டிருக்கிறது. தங்களைத் தாண்டியே தளபதியை அணுக முடியும் என்ற அணி பலம்பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. கள ஆய்வு நடத்தியும் களத்தில் மாற்றம் காணாத உடன்பிறப்புகளுக்கு இது உறுத்துதலை அதிகப்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா பாணி என்ற ஜிம்மிக்ஸ் திமுக போன்ற ஜனநாயகத்துவ சமுத்திரத்தில் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துகொண்டிருக்கிறது.

திமுகவுக்குள் மெல்ல மெல்ல இடங்கை, வலங்கை போராட்டம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. சில இடங்களில் சீனியர்கள் இளையோரை எரிச்சல்படுத்துகிறார்கள். சில இடங்களில் இளையோர் ஸ்டாலின் பெயரைச் சொல்லி சீனியர்களை உளைச்சல்படுத்துகிறார்கள்.

திமுக என்னும் கோட்டைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய இந்த இடங்கை, வலங்கை போராட்டம் பற்றிப் பார்ப்போம்.

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts