MMK urgent meeting DMK alliance

சீட் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதா? மமக முக்கிய முடிவு!

அரசியல்

MMK urgent meeting DMK alliance

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) நிறைவு செய்யப்பட்டது.

ஆனால், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி தங்களுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதை திமுக தலைமை நிராகரித்து விட்டது.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் திமுக கூட்டணியில் தொடர்வது பற்றி கொதிப்பான கருத்துக்கள் அவர்களது வாட்ஸ் அப் குரூப்களில் நேற்று இரவு முதல் பகிரப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மனிதநேய மக்கள் கட்சியின் அவசர உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று (மார்ச் 10) காலை 9 மணிக்கு தொடங்கி 11:30 மணி வரை சென்னையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தலைமை நிலைய நிர்வாகிகள், மாநில செயலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில், “திமுக நம்மை ஏமாற்றி விட்டது. மதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக நம்மையும் வேல்முருகனையும் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அழைத்துப் பேசி நம்மை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டு விட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலிலும் இடம் இல்லை. இந்த மக்களவைத் தேர்தலிலும் இடம் இல்லை என்றால்… நாம் ஏன் திமுகவுக்காக தேர்தல் வேலை செய்ய வேண்டும்?

நேற்று வரை திமுகவை திட்டிக்கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு கூட ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஆண்டாண்டு காலமாக தேர்தல் களத்தில் திமுகவுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது கட்சியை அவமதித்து இருக்கிறது திமுக. திமுகவுக்கு நாம் இந்த தேர்தலில் வேலை செய்ய வேண்டாம்.

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் நாம் தோழமை அடிப்படையில் பணியாற்றலாம் அல்லது கூட்டணியை விட்டு வெளியேறலாம்” என்றெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கொதிப்பில் இருப்பதால் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அடங்கிய செயற்குழு கூட்டத்தை அவசரமாக வருகிற மார்ச் 13-ஆம் தேதி திருச்சியில் கூட்ட முடிவு எடுத்து இருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. இந்த நகர்வுகளை அதிமுகவும் கவனித்துக் கொண்டு வருகிறது.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேமுதிகவில் புதிதாக ஐடி விங் அணி: பிரேமலதா அறிவிப்பு!

Miss World 2024: தவறவிட்ட இந்தியாவின் சினி செட்டி.. வென்றது யார்?

+1
2
+1
3
+1
1
+1
4
+1
3
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *