’ஜனப்ரிய நாயகன்’ ரிட்டர்ன்ஸ்!
’தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ வந்தபோது விஜய்யின் ரசிகர் என்பதை இயக்குனர் அட்லீ நிரூபித்ததாகப் புகழ்ந்தோம். ‘பேட்ட’ மற்றும் ‘ஜெயிலர்’ படங்களில் கார்த்திக் சுப்புராஜையும் நெல்சனையும் அப்படித்தான் ரஜினி ரசிகர்களாகப் பார்த்தோம். ‘விக்ரம்’மில் லோகேஷ் கனகராஜை கமலின் தீவிர ரசிகராகக் கொண்டாடினோம். ‘லூசிபர்’ படத்தில் மோகன்லாலைக் கொண்டாடும்விதமாக இயக்குனர் பிருத்விராஜ் திரையில் காட்டியிருந்தார் என்றோம். அந்த வரிசையில் மலையாள நடிகர் திலீப்பின் ரசிகராக ‘பவி கேர்டேக்கர்’ படத்தில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வினீத்குமார்.
திலீப்பின் பழைய படங்களை நினைவூட்டும் வகையில், ஆங்காங்கே அவர் நடித்த காட்சிகளின் தாக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம். குறிப்பாக, ‘காவலன்’ படத்தின் மூலமான சித்திக்கின் ‘பாடிகார்டு’ படத்தை நிறையவே நினைவூட்டுகிறது.
எல்லாம் சரி, ‘பவி கேர்டேக்கர்’ படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
யார் இந்த பவி?
கொச்சியிலுள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டி கார்டு மற்றும் கேர்டேக்கர் ஆகப் பணியாற்றுகிறார் பவித்ரன் என்ற பவி (திலீப்). அவரது சகோதரியின் குடும்பம் வேறொரு ஊரில் இருக்க, பெரிதாகச் சொந்தங்கள் இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார்.
நடுத்தர வயதை எட்டியும் அவருக்குத் திருமணமாகவில்லை. பணம் சம்பாதிப்பதே பெரிய கஷ்டம் என்ற சூழ்நிலையைக் கொண்டிருந்ததால், அவர் அது குறித்துப் பெரிதாகச் சிந்திக்கவில்லை. அதேநேரத்தில், துணை இல்லாத ஏக்கம் அவரது நடவடிக்கையில், மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எதையும் சந்தேகக்கண் கொண்டு நோக்குகிற குணத்தை உருவாக்குகிறது.
ப்ரோ எனும் நாயை வளர்த்து வருவதன் காரணமாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்காமல் வேறொரு வீட்டில் வசிக்கிறார் பவி. இரவில் செக்யூரிட்டி வேலை என்பதால், பகலில் மட்டுமே அங்கு தங்குவார். அதனால், வீட்டின் உரிமையாளரான மரியம்மாள் (ராதிகா சரத்குமார்), இரவில் வேறொருவர் அங்கு தங்க ஏற்பாடு செய்கிறார்.
முதலில், அது பவிக்கு ஏற்புடையதாக இல்லை. முடிந்தவரை, அந்த நபர் அங்கிருந்து ஓடுவதற்கான வேலைகளைச் செய்கிறார்.
ஆனால், அங்கு தங்கியிருப்பது ஒரு பெண் என்று தெரிய வந்ததும் அவரது மனம் மாறுகிறது. அவரிடத்தில் மன்னிப்பு கேட்கிறார். பதிலுக்கு, அந்தப் பெண் அதனை ஏற்பதாகக் கூறுகிறார். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்விதமாக, தம் மனதில் இருப்பதை தெரிவிக்கின்றனர்.
மாறி மாறி இருவரும் குறிப்புகள் எழுதி வீட்டில் வைத்துவிட்டுச் செல்வதன் வழியாகவே அது நிகழ்கிறது.
அந்த ‘தகவல் தொடர்பு’ பவியின் இயல்பையே புரட்டிப் போடுகிறது. அவரது குணாதிசயங்கள் மாறுகின்றன.
அவர் அப்பெண்ணின் மீது காதலில் விழுகிறார். அவரைக் காணத் துடிக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணோ ‘இந்த குறிப்புகளே போதும்’ என்கிறார்.
ஒருகட்டத்தில் ‘நான் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவள்’ என்கிறார் அந்தப் பெண்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஜானகி (ஸ்ரேயா ருக்மிணி), குழந்தைகளுக்கு பாட்டு கற்றுத்தரும் ஆசிரியர் (ஜூஹி ஜெயகுமார்), அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் லீனா (ஸ்வாதி கொண்டே), அங்கு பணியாற்றும் இன்னொரு பெண் ஸ்ருதி (திலீனா ராமகிருஷ்ணன்), தபால்காரராக வரும் ஜீனா (ரோஸ்மின் தடத்தில்) என்று ஐந்து பெண்களை அவர் தினசரி வாழ்வில் அதிகமும் எதிர்கொண்டு வருகிறார்.
அதில், ‘இவர்தான் அந்தப் பெண்’ என்று பவி ஒரு பெண்ணைக் குறிப்பிடுகிறார். உண்மையில், அவருடன் குறிப்புகள் வழியாக உரையாடுவது வேறொரு பெண். பவியின் பதிலால் வருத்தமுறும் அப்பெண், ‘நான் யார் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா’ என்று எழுதி வைத்துவிட்டு, அங்கிருந்து சென்று விடுகிறார்.
அந்த காதல் பிரிவைத் தாங்க முடியாத பவி என்ன செய்தார், இறுதியில், அவர் அந்தப் பெண்ணை நேரில் பார்த்தாரா, தனது காதலைத் தெரிவித்தாரா என்று சொல்கிறது படத்தின் முடிவு.
கதையைச் சொன்னவுடனேயே, ‘காவலன்’ பட நினைவு சிலருக்கு வந்திருக்கும். அது மட்டுமல்லாமல், திலீப்பின் பல படங்களின் தாக்கம் இதில் நிச்சயம் தெரியும். அவற்றை மீறி, திலீப் ஏற்றிருக்கும் பவி என்ற பாத்திரம் நம்மை ஈர்க்கும் என்பதே இப்படத்தின் யுஎஸ்பி. காரணம், பவி என்பவர் யார் என்பதற்கான பதிலாகவே மொத்த திரைக்கதையும் அமைந்துள்ளது.
மீண்டும் திலீப்!
’ஜனப்ரிய நாயகன் திலீப் ரிட்டர்ன்ஸ்’ என்று அவரது ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடலாம். அந்த அளவுக்கு ரொமான்ஸ், காமெடியில் அசத்தியிருக்கிறார். முக்கியமாக, முகம் தெரியா பெண்ணிடம் காதலில் விழுந்தபிறகான தருணங்களில் அவரது நடிப்பு அருமை.
சமீபகால திலீப் படங்களில் முதுமையின் தாக்கம் அவரது முகத்தில் நன்கு தெரிந்தது. இதில் அந்தக் குறை தென்படாமல் திரையில் திலீப்பைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் வினீத்குமார்.
முகம் தெரியா பெண்ணிடம் திலீப் பாத்திரம் காதல் கொள்வதே கதையில் பிரதானம். அதனால், இதில் ஸ்வாதி கொண்டே, ரோஸ்மின் தடத்தில், ஸ்ரேயா ருக்மிணி, ஜுஹி ஜெயகுமார், திலீனா ராமகிருஷ்ணன் என்று ஐந்து நாயகிகள் வந்து போயிருக்கின்றனர்.
ஒவ்வொருவரையும் நினைவில் இருத்தும்படியாகக் காட்சிகளை அமைக்காமல், வெறுமனே சில ஷாட்களில் அவர்களைக் காட்டிவிட்டுக் கடந்து செல்கிறது திரைக்கதை. அதுவே இப்படத்தின் முக்கியமான பலவீனம்.
ராதிகா இதில் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் மரியம்மாவாக நடித்துள்ளார். அவருக்கு வேறொருவர் டப்பிங் கொடுத்திருப்பதால், அவரது இருப்பே சப்பென்று போய்விடுகிறது.
அவரது பேரனாக அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் வந்து போயிருக்கிறார். அவருக்கும் திரையில் பெரிதாக இடமில்லை.
இவர்கள் தவிர்த்து வாகன ஓட்டுநராக தர்மஜன் போல்காட்டி, இன்னொரு செக்யூரிட்டியாக ஜானி ஆண்டனி, ராதிகாவுக்கு தெரிந்த போலீஸ்காரராக ஸ்படிகம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
திலீப்பின் ரசிகர்களுக்காக ஒரு சண்டைக்காட்சியும் படத்தில் உண்டு. அக்காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தாலும், திரைக்கதையில் அது தேவையற்ற ஆணியாகவே உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், சனு தாஹிரின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு பிரேமையும் புகைப்படம் போல அழகுடன் வார்த்திருக்கிறார். அதற்கேற்ற வகையில் டிஐயும் செய்யப்பட்டுள்ளது.
நிமேஷ் தனூரின் தயாரிப்பு வடிவமைப்பு ஒவ்வொரு பிரேமையும் அழகுறக் காட்ட உதவியிருக்கிறது. முக்கியமாக, திலீப்பின் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் அசத்தியிருக்கிறது.
முழுக்கவே திலீப்பை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருப்பதை அறிந்தாலும், பிற பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாததைக் கவனிக்கத் தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தீபு ஜோசப். இடைவேளைக்குப் பிறகு படம் போரடிப்பதாகத் தோன்றவும் அதுவே காரணமாகிறது.
மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்பாதியில் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவையை அதிகப்படுத்துவதில் அவரது பின்னணி இசையின் பங்கு அதிகம். போலவே, பின்பாதியில் நம் மனதில் காதலை நிரப்புகிறார்.
பாடல்களைப் பொறுத்தவரை, மிதுன் ஒரு சூப்பர்ஹிட் ஆல்பமொன்றை ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார். முக்கியமாக ‘பிறகிலாரோ விளிச்சு’, ’புலர்காலே பூவிளிகேட்டு’ பாடல்கள் சட்டென்று நம் மனதுக்குள் ஊடுருவுகின்றன.
ராஜேஷ் ராகவன் இப்படத்திற்கு எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.
‘லஞ்ச்பாக்ஸ்’ படத்தின் தாக்கம் இத்திரைக்கதையில் உண்டு. ‘பாடிகார்டு’ படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் இதில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிஐடி மூசா, இ பறக்கும் தளிகா படங்களின் காட்சிகளும் இதில் ‘மறுஆக்கம்’ செய்யப்பட்டுள்ளன.
இவ்விரண்டு படங்களுமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டவை. இவை தவிர்த்து, 2000-ஆவது ஆண்டுவாக்கில் திலீப் நடித்த பல படங்களில் அவரது நகைச்சுவை முகபாவனைகளும், பிற பாத்திரங்களிடம் ‘மொக்கை’ வாங்கும் காட்சிகளும் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தன.
அப்படிப்பட்ட இடங்கள் இதன் முதல்பாதியில் அதிகம். அந்த வகையில், ஒரு திலீப் ரசிகராக ராஜேஷும் இயக்குனர் வினீத்குமாரும் செயல்பட்டிருக்கின்றனர்.
அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் அத்தனை பேரையும் இப்படம் நமக்குக் காட்டவில்லை. நாயகிகளுக்குக் கூட அதிகமாக முக்கியத்துவம் தரப்படவில்லை. திலீப்புக்கு மட்டுமே பிரதான இடம் தந்திருக்கிறது திரைக்கதை. அது மட்டுமல்லாமல், லாஜிக் சார்ந்த பல கேள்விகளுக்கும் இப்படத்தில் பதில்கள் இல்லை. அவையனைத்தும் இப்படத்தின் மைனஸ்.
பார்க்கத் தகுந்த படமா?
முன்னர் தந்த ஆக்ஷன் படங்களின் தாக்கத்தில் சமீபகாலமாகச் சில படங்களைத் தந்து வந்தார் திலீப். அவை தந்த காட்சியனுபவம், ரசிகர்களை தியேட்டரை விட்டு ஓடச் செய்தன.
அந்த வரிசையில் சேராமல், குடும்பங்கள் ரசித்துச் சிரிக்கும் விதமாக உள்ளது ‘பவி கேர்டேக்கர்’. வன்முறையோ, ஆபாசமான காட்சிகளோ, அருவெருக்கத்தக்க வசனங்களோ இதில் கிடையாது. அதேநேரத்தில், புதுமை என்று சொல்லத்தக்க விஷயங்களும் இதில் இல்லை.
வினீத்குமார் ஒரு நடிகர் என்பதால், திலீப் எப்படியெல்லாம் அழகாகத் தெரிவார் என்பதை உணர்ந்து திரையில் அவரது பாத்திரத்தைக் காட்டியிருக்கிறார். நம் பொறுமையைச் சோதிக்காத அளவுக்கு, திரைக்கதை ட்ரீட்மெண்டை கையாண்டுள்ளார். குறிப்பாக, ஐரோப்பிய படங்களின் அழகியலைப் பிரதிபலிக்கும் விதமாகக் காட்சியாக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
’திலீப் ரிட்டர்ன்ஸ்’ என்று அவரது ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாக ‘பவி கேர்டேக்கர்’ நிச்சயம் இருக்கும். அதேநேரத்தில் வழக்கத்திற்கு மாறான கதை சொல்லலைக் கொண்ட திரைப்படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏற்றதல்ல.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை நெருக்கடி” – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!