மாநில அரசின் தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி தீருவோம் என்று பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி குலசேகரன் பட்டினம் ராக்கெட் ஏவுதளம், துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்த் சோனாவால், ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “யுபிஏ அரசாங்கத்தின் மீது நான் குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். பல தசாப்தங்களாக இங்கே நிறைவேறிக்கொண்டிருக்கிற நலத்திட்டங்கள் கோரிக்கைகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஆனால், இன்று பிரதம சேவகனாக உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றியிருக்கிறேன்.
ஹைட்ரஜன் மூலமாக இயங்கும் மக்கள் பயண படகு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. காசியின் கங்கை ஆற்றின் மீது வெகு விரைவில் இந்த பயண படகு தனது பயணத்தை தொடங்க இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்து உரையாற்றக்கூடிய நற்பெயர் எனக்கு கிடைத்தது. காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே இருக்ககூடிய உறவு மேலும் ஆழப்பட இருக்கிறது.
தமிழகத்தின் ரயில், சாலைகள் என பல வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனால் சுற்றுலாவுக்கும் தொழில்களுக்கும் உந்து சக்தி உண்டாகும். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் கடல் வாணிப துறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.
மத்திய அரசின் முயற்சியால் நவீன இணைப்பு திறனில் தமிழ்நாடு ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளது. ஒரு விஷயத்தை உங்கள் முன்பாக வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் உங்களிடம் தெரிவிக்கும் கருத்து யாவும், ஒரு அரசியல் கட்சியினுடைய சித்தாந்தமோ, அல்லது என்னுடைய தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது.
இது வளர்ச்சி முன்னேற்றத்திற்கான கோட்பாடு. நான் இதை இங்கே கூறும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் செய்தித்தாள்கள் இவற்றை பிரசுரிக்க மாட்டார்கள். ஏனென்றால் இங்கே இருக்கும் அரசாங்கம் அவற்றை பிரசுரிக்க விடாது. ஆனாலும் கூட நண்பர்களே, இந்த தடைகளையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம்.
மத்திய அரசின் முயற்சியின் காரணமாக, கடல் வாணிபம் மற்றும் நீர்வழித்துறை இன்று பெரும்புகழ் அடைந்து வருகிறது. நீர்வழி பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்களில் கடல் வாணிப துறையின் இந்த வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க இருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டிற்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தமிழகம் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் உங்களுக்கு மேலும் ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறேன்.
மூன்றாவது முறையாக நாம் மறுபடியும் அரசு அமைக்கும் போது மோடியினுடைய உத்தரவாதத்தை நிறைவேற்றியே தீருவேன் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன். இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் எப்போதும் போலவே நிறைவான பலத்துடன் முயற்சி செய்வோம். இது தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அளிக்கும் உத்தரவாதம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சரிவில் தங்கம் விலை… 1 கிராம் எவ்வளவுன்னு பாருங்க!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!