2024ஆம் ஆண்டுக்கான 71வது ‘ஃபெமினா மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி, சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெற்றது. இந்த ஆண்டு, “Beauty with a Purpose” என்ற கருப்பொருளுடன் இந்த உலக அழகி போட்டி நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 18 அன்று டெல்லியில் தொடங்கிய இந்த போட்டியின் இறுதிப்போட்டி, மார்ச் 10 அன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கான்வென்சன் சென்டரில் நடைபெற்றது.
இந்த ‘உலக அழகி’ இறுதிப்போட்டியை, பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் முன்னாள் உலக அழகியான மேகன் யங் தொகுத்து வழங்கினர்.
பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 112 பேர் பங்கேற்றுக்கொண்ட இந்த இறுதிப்போட்டிக்காக, திரைப்பட தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா, நடிகைகள் கீர்த்தி சனோன், பூஜா ஹெக்டே, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், 3 முன்னாள் உலக அழகிகள் என 12 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டது.
கர்நாடகா சார்பில் போட்டியிட்டு, 2022 ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்ற 22 வயதான சினி செட்டி, இந்தியா சார்பில் இப்போட்டியில் பங்கேற்றார்.
முதலாவதாக நடைபெற்ற டாப் மாடல் போட்டியில், சிறப்பாக செயல்பட்டு காலிறுதிக்கு முன்னேறிய 40 பேர்களில் ஒருவராக, சினி செட்டி தகுதி பெற்றார். இவர்களுக்கு, அடுத்து நடத்தப்பட்ட போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட சினி செட்டி, டாப் 12 போட்டியாளராக அடுத்த சுற்றுக்கு நுழைந்தார்.
இதை தொடர்ந்து, அந்த ‘உலக அழகி’ பட்டத்திற்கு அருகில் மேலும் ஒரு அடி எடுத்து வைத்த சினி செட்டி, டாப் 8 போட்டியாளர்களில் ஒருவராக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
பின் நடைபெற்ற கேள்வி & பதில் சுற்றில் சிறப்பாக பதில் அளித்தபோதும், டாப் 8 சுற்றில் லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மின் அசைடவ்னிடம் தோல்வியை சந்தித்து, இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் ‘உலக அழகி’ போட்டியில் இருந்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெளியேறினார்.
இறுதிச்சுற்றுக்கு டிரினிடாட் & டொபாகோ நாட்டை சேர்ந்த அச் அப்ரஹாம்ஸ், போஸ்ட்வானா நாட்டை சேர்ந்த லெசேகோ சோம்போ, செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பைஸ்கோவா மற்றும் லெபனானை சேர்ந்த யாஸ்மின் அசைடவ்ன் ஆகியோர் முன்னேறினர்.
இவர்களில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பைஸ்கோவா 2024ஆம் ஆண்டுக்கான ‘உலக அழகி’ பட்டத்தை வென்றார். லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மின் அசைடவ்ன் 2ஆம் இடம் பிடித்தார்.
இந்த 71வது ‘ஃபெமினா மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில், ‘Beauty with a Purpose’ விருதை பிரேசில் நாட்டை சேர்ந்த லெடீசியா ஃப்ரோடாவும், ‘Beauty with a Purpose’ மனிதாபிமான விருது நீதா அம்பானியும் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக, இந்தியாவுக்காக ரெய்தா பரியா பொவெல் (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடேன் (1997), யுக்தா மூகே (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மானுஷி சில்லர் (2017) ஆகியோர் ‘உலக அழகி’ பட்டம் வென்றுள்ளனர்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: கண்களைச் சுற்றி கருவளையமா… கவலை வேண்டாம்!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. உணவுகளை வீணாக்காமல் இருப்பது எப்படி?