மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்கள்: இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்கும் உதயநிதி

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை மண்டல வாரியாக சந்தித்து வருகிறார்.

மொத்தமுள்ள 9 மண்டலங்களில், தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 4 மணி நேரம் இரண்டு மண்டல நிர்வாகிகளைச் சந்திக்க முடிவெடுத்து அதற்காக அழைப்பு கொடுத்திருந்தார்.
பிப்ரவரி 14ஆம் தேதி மண்டலம் 1, மண்டலம் 2 என இரண்டு மண்டல திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மாலை சென்னை வடக்கு, தெற்கு, தென்-கிழக்கு, வட கிழக்கு, சென்னை கிழக்கு  என முதலில் மண்டலம் 1க்கு உட்பட்ட மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை சந்தித்தார்.

Image

ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வந்திருந்த மாவட்ட மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களது குறைகளையும், புகார்களையும் கேட்டறிந்தார். ஒவ்வொருவரிடமும் கேட்டறிய சுமார் 10 நிமிடங்கள் வரை தேவைப்பட்டிருக்கிறது.

இதனால் நேற்று ஒரு மண்டல நிர்வாகிகளை மட்டுமே சந்திக்க முடிந்ததால் இன்று பிப்ரவரி 15ஆம் தேதி இரண்டாவது மண்டல அமைப்பாளர்களைச் சந்தித்தார்.

கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம், கடலூர் மாநகரம் – கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

“ஒவ்வொரு நிர்வாகிகளும் மினிட் நோட்டு மற்றும் புகைப்படம் ஆல்பங்களை கையில் வைத்துக்கொண்டு உதயநிதியை சந்தித்து வருகிறார்கள்.

“உங்களுக்கு பொறுப்பு கொடுத்ததிலிருந்து என்னென்ன நிகழ்ச்சிகள், பணிகளை செய்திருக்கிறீர்கள்” என்று கேட்டு ஆய்வு செய்தார். சிறப்பாக பணி செய்தவர்களுக்கு,  ‘பணி சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்’ என எழுதி கையெழுத்து போட்டு தருகிறார்.

அதன் பிறகு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை கேட்டு, அவற்றை சரி செய்கிறார்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், நகரம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் எப்படி ஒத்துழைக்கிறார்கள்.

இளைஞர் அணி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்களா? அவர்கள் (கட்சி) நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்துகொள்கிறீர்களா? என விசாரிக்கிறார்.

சில நிர்வாகிகளிடம், “நீங்க அமைச்சர் ஆதரவாளர், நீங்க எம்எல்ஏ ஆளு, எப்போதும் அவங்க பின்னாடி தான் சுத்துறீங்க” என்றும் கேட்கிறார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது குறைகள் புகார் இருந்தால், அதைப் பற்றி எழுதி வாங்கிக் கொள்கிறார்” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட மாநில அமைப்பாளர்கள்.

Image

“இதனால் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை சந்தித்து, “என் மீது புகார் சொல்லாமல், நல்லா பணி செய்கிறார் என்று சொல்லுப்பா” என்று கூறி வருவதாக இளைஞரணி வட்டாரங்கள் கூறுகின்றன.

“தற்போது இளைஞர் அணி அமைப்பாளர்களை சந்தித்து வரும் உதயநிதி ஸ்டாலின், பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இளைஞர் அணி, திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய முதல்வரிடம் பரிந்துரைப்பார்” என்றும் திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

Video : இதயங்களை வென்ற சர்ஃப்ராஸ்… வறுத்தெடுக்கப்படும் ஜடேஜா

அமலாக்கத் துறைக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மனு : கோர்ட் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *