காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழு தலைவராக நேற்று (ஆகஸ்ட் 16) நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 16) காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் பிரச்சார குழுத் தலைவராக குலாம் நபி ஆசாத், நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகினார். தலைவர் பதவி மட்டுமல்லாமல் , மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் , தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர் இந்த பதவியை ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய அரசியலில் இருந்த தன்னை மாநில அரசியலில் நியமித்து இருப்பது பிடிக்காமல் இந்த முடிவை குலாம் நபி ஆசாத் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்ததாக காஷ்மீர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைமை மாற்றம் கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களில் இவரும் ஒருவர். குலாம் நபி ஆசாத்துடன் இணைந்து காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமான விகார் ரசூல் வானியை கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்