அமலாக்கத் துறை விசாரணையை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை தொடங்கக் கூடாது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ”மத்திய குற்றப்பிரிவு வழக்கில் விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத் துறை வழக்கு செல்லாததாகிவிடும். இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளது ” என்று வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில், “வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிப்ரவரி 15ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அமலாக்கத் துறை விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டது.
அதுபோன்று செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், 20ஆவது முறையாக நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IND vs ENG: தோனி சாதனையை விரட்டி விரட்டி முறியடித்த ரோகித்… ஜடேஜா அபார சதம்!
AK 63: அஜித்துக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்?