திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று (ஜூலை 14) ஆஜரானார்.
திமுகவை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதனை அண்ணாமலை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்ற உத்தரவின்படி, அண்ணாமலை இன்று நேரில் ஆஜரானார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை நுழையும்போது, அவருடன் ஏராளமான தொண்டர்களும் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், ”ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்ட DMK Files 1 திமுகவினரிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.
அதனைத்தொடர்ந்து அதில் தொடர்புடைய திமுக எம்.பிகளும், அமைச்சர்களும் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் அவதூறு நோட்டீஸ் எனக்கு அனுப்பியிருந்தனர்.
பாஜக கட்சியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வாய்பேச்சாகவோ, அறிக்கையாகவோ இல்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. எனவே நீதிமன்றத்தினை சந்திப்பதற்கு இன்று தயாராக வந்திருக்கிறோம்.
டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் முன்னதாக அளித்த சத்தியபிரமாணத்தில் கூட பல பொய்களை கூறியுள்ளார்.
டி.ஆர்.பாலு கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை பல ஊழல் செய்ததால் தான் அவருக்கு 2009ஆண்டு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலுவின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசினார். ஆனால் அவர் மீது அப்போது வழக்கு தொடரவில்லை.
மேலும் டி.ஆர்.பாலு 3 நிறுவனத்தில் மட்டுமே பங்குதாரராக இருக்கிறேன் என்று சத்தியபிரமாணத்தின் போது கூட பொய் கூறி இருக்கிறார். ஆனால் அவருடைய மகன், மருமகள் எங்கே இருக்கிறார்கள் எனபது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு உண்மைகளை மறைத்து பல பொய்களை சத்தியபிராமணத்தில் கூறி இருக்கிறார். எனினும் அவர் தெரிவித்த கருத்துக்கு பதில் கூற நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இப்போது தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும், மூன்றாம் தலைமுறைக்கும் இடையே யுத்தம் நிலவுகிறது. பாஜகவுடன் நிற்கின்றவர்கள் முதல் தலைமுறை. திமுகவின் மொத்த குடும்பமும் மூன்றாம் தலைமுறை. இந்த யுத்தம் கடுமையாக இருக்கும். எனவே ஊழலுக்கு எதிரான போரட்டத்தில் இளைஞர்கள் பாஜகவுடன் இணைய வேண்டும்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
50வது படம்: நன்றி தெரிவித்த பரத்
INDvsWI: அடுத்தடுத்து சதம்… சாதனைகளை தகர்த்தெறிந்த ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி!