INDvsENG : அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம் கண்ட சர்ஃப்ராஸ் கான், ஜடேஜாவின் தவறான முடிவால் ரன் அவுட் ஆகி கண்கலங்க மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதனை கண்டு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் கத்தியதும், சர்ஃபராஸ் கான் மனம் உடைந்த அழும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15) காலை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ரோகித் (131) மற்றும் ஜடேஜா (110*) இருவரும் 204 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வலுவான ஸ்கோரை எட்டி உதவியுள்ளனர்.
எனினும் இந்த இருவரையும் தாண்டி இன்றைய போட்டியில் அனைவரையும் தன் பக்கம் கவனிக்க வைத்தவர் நீண்ட காத்திருப்புக்கு பின் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் தான்.
உணர்ச்சிவசப்பட்டு அழுத தந்தை!
காலையில் அவருக்கு இந்திய அணியின் தொப்பியை ஜாம்பவான் அனில் கும்பிளே வழங்கியதுமே, தனது நீண்ட போராட்டத்தில் உறுதுணையாக நிற்கும் தந்தை மற்றும் மனைவியிடம் காண்பித்தார். அவர்கள் இருவரும் உணர்ச்சி வசப்பட்டு அழுத நிலையில் அவர்களின் கண்ணீரை துடைத்த காட்சிகள் காலை முதலே சமூகவலைதளங்களில் வைரலானது.
https://twitter.com/linktoshyju/status/1758097255196938696
மேலும் சர்ஃப்ராஸ் கான் தந்தை அணிந்திருந்த மேல் ஜாக்கெட்டும் பலரின் கவனத்தை கவர்ந்தது. கிரிக்கெட்டை இதுவரை ’ஜென்டில்மேன் கேம்’ என்று மட்டுமே கூறி வந்த நிலையில், கிரிக்கெட் கனவுடன் வாழும் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் விதமாக ’Cricket is a Everyone’s Game’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிமுக வீரரின் அதிவேக அரைசதம்!
அதனைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் அபாரமாக ஆடி சதம் கண்ட ரோகித் சர்மா 131 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும், தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சர்ஃப்ராஸ் கான் களம் கண்டார்.
மைதானத்தில் வந்த அவரை ரோகித் தோளைத் தட்டி அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அந்த உற்சாகத்துடன் களம் கண்ட சர்ஃப்ராஸ் ஆரம்பம் முதலே பவுண்டரி, சிக்ஸர்களை மைதானத்தில் நாலாபுறங்களிலும் பறக்கவிட்டார்.
48 பந்தில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் அரைசதம் பதிவு செய்தார். இதன்மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம் கண்ட இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் சர்ஃபராஸ். அதே வேகத்தில் சதத்தை நோக்கி அதிரடியாக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் 99 ரன்களுடன் ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா தனது சதத்தை நிறைவு செய்யும் முயற்சியில் சிங்கிள் தட்டி விட்டு ஓட முயற்சித்தார். அவரை பார்த்து எதிர்முனையில் இருந்த சர்ஃப்ராஸும் ஓட, அதற்குள் பந்து பீல்டர் கையில் சிக்கியதை கண்ட ஜடேஜா பின் வாங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சர்ஃப்ராஸ் கிரீஸுக்குள் மீண்டும் நுழைவதற்குள் மார்க் வுட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
https://twitter.com/manishG11588209/status/1758101522506973405
தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் முன்னேறி கொண்டிருந்த சர்ஃப்ராஸ் கான் 62 ரன்னில் அவுட் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தில் இருந்து கலங்கிய கண்களுடன் வெளியேறினார். அதற்குள் அவர் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்திருந்தார்.
சர்ஃப்ராஸ் அவுட் ஆனதை கண்டு மைதானத்தில் இருந்த ஓட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா தனது தொப்பியை வீசி எறிந்து கோபத்தில் கத்தினார்.
https://twitter.com/izeeshan011/status/1758089115847815562
மேலும் டிரெஸ்ஸிங் ரூம் வந்த சர்ப்ராஸுக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். எனினும் கண் கலங்கியபடி தனியாக அவர் வருத்தப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ஜடேஜாவை #Selfish என்ற ஹேஷ்டேகின் கீழ் ஜடேஜாவை டேக் செய்து திட்டி வருகின்றனர்.
Jadeja was too mean to betray a debutant. @ImRo45 was also unhappy with Selfish @imjadeja.
Well played Sarfaraz. 👏👐.#SarfarazKhan | #INDvENG | #Jadeja
pic.twitter.com/KDYpS4mZRY— Mukhalifeen E Majlis (@shh_ji20) February 15, 2024
மேலும் நீண்ட போராட்டத்திற்கிடையே தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கானை ரசிகர்கள் பாராட்டி வருகிறனர். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடிக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்தியாவுக்காக தனது முதல் டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பு, சர்ஃபராஸ் முதல் தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடி 69.82 சராசரியுடன் 3912 ரன்களை குவித்து ஒரு அற்புதமான சாதனையை படைத்துள்ளார்.
முதல் நாள் போட்டியின் விவரம்!
ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடந்த போட்டி இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரோகித் மற்றும் ஜடேஜா இருவரும் 204 ரன்கள் குவித்தனர். மேலும் இருவரும் சதம் அடித்து இந்திய அணி 326-5 என்ற வலுவான ஸ்கோரை எட்டி உதவியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IND vs ENG: தோனி சாதனையை விரட்டி விரட்டி முறியடித்த ரோகித்… ஜடேஜா அபார சதம்!
அமலாக்கத் துறைக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மனு : கோர்ட் உத்தரவு!