நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக தற்போது தீவிரம் காட்டி வருகிறது. கடந்த வாரம் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரை சந்தித்தனர்.
இந்தநிலையில், கட்சியை வலுப்படுத்தும் விதமாக தேமுதிகவில் புதிதாக சமூக வலைதள அணி இன்று (மார்ச் 10) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டுவிட்டர், யூடூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன.
சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதள அணி செயலாளராக செந்தில் குமார், துணைச் செயலாளர்கள் அரவிந்தன், மகேந்திரன், தமிழரசன், சிவக்குமார் நாகப்பன் நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, தேமுதிக செய்தி தொடர்பாளராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன், துணை செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இளங்கோவன், வெங்கடேசன், தேர்தல் பணி குழு செயலாளர் மகாலெட்சுமி, இளைஞர் அணி செயலாளர் நல்லதம்பி, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக, அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்!
Miss World 2024: தவறவிட்ட இந்தியாவின் சினி செட்டி.. வென்றது யார்?