“உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கிய எடப்பாடி”: மா.சுப்பிரமணியன்

Published On:

| By Selvam

எடப்பாடி பழனிசாமி தனது வசம் இருந்த இரண்டு துறைகளையும் தனது குடும்பத்திற்கு டெண்டர் ஒதுக்குவதற்காகவே பயன்படுத்தியுள்ளார் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஏப்ரல் 25) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஊழல் எப்படியெல்லாம் அரங்கேறியிருக்கிறது என்பதை மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாக்கியிருக்கிறது. 2016 முதல் 2021-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் நிர்வாக சீர்கேடுகளும் முறைகேடுகளும் வியாபித்திருந்தன என்பதை சிஏஜி அறிக்கை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி வசமிருந்த துறைகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக தணிக்கைக்குழு வெளிப்படுத்தியுள்ளார்கள். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை போன்ற மிக முக்கியமான துறைகள் எடப்பாடி பழனிசாமி தனது வசம் வைத்திருந்தார். அதன் மூலம் தனது சம்பந்திகளுக்கும் குடும்பத்தினருக்கும் டெண்டர்களை ஒதுக்குவதற்காகவே வைத்துக்கொண்டார் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவுப்படுத்தியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த இரண்டு துறைகளிலும் டெண்டர் ஒதுக்குவதற்கான அடிப்படை விதிகள் மீறப்பட்டுள்ளது. முறைகேட்டின் உச்சமாக அரசு அதிகாரிகளின் கணினிகளை பயன்படுத்தி ஒப்பந்தப்புள்ளிகளைத் தாக்கல் செய்யும் அளவிற்கு நெடுஞ்சாலை துறையில் அரசு இயந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். 2800 டெண்டர்கள் ஒரே கணினியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 907 ஒப்பந்தப்புள்ளிகள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது அப்பட்டமான விதிமீறல் என்று சிஏஜி அறிக்கை கண்டனத்தை பதிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

குட்கா வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை!

தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ: ஸ்பெஷல் என்ன?