கோடை காலம் தொடங்கி பலரும் சுற்றுலா செல்ல தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான கேரளாவில் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார்.
இது இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டமல்ல. தெற்காசியாவிலே இதுதான் முதல் வாட்டர் மெட்ரோ திட்டமாகும். இதுவரை தரைவழி மெட்ரோ மட்டுமே இருந்து வந்த நிலையில் முதன்முறையாக நீர் வழியிலும் மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கேரளா.

ரயில் அல்லது சாலை போக்குவரத்தை விட நீர் போக்குவரத்தில் மாசு குறைவு. எனவே கொச்சி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கும் நோக்கிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டின் கீழ் மொத்தம் 78 மின்சார ஹைபிரிட் படகுகள் தயாரிக்கப்படவுள்ளன. முதல்கட்டமாக 8 மெட்ரோ படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொச்சி துறைமுக நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள பத்து தீவுகளையும் இந்த வாட்டர் மெட்ரோ போக்குவரத்து இணைக்கிறது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட உள்ளது.
கேரளாவின் கனவு திட்டமான இந்த திட்டத்தை ஜெர்மனியைச் சேர்ந்த கே.எப்.டபுல்யூ என்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன் 1,136.83 கோடி ரூபாய் செலவில் கேரள அரசு செயல்படுத்துகிறது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.
கேரள உயர் நீதிமன்றம் – விபின் மற்றும் விட்டிலா – கக்கநாட் இடையே என இரண்டு முனையங்களில் வாட்டர் மெட்ரோ இயக்கப்படுகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாட்டர் மெட்ரோ சேவை இயக்கப்படும். இதில், உயர் நீதிமன்றம் – விபின் வரை 20 நிமிடங்களில் பயணிக்கலாம். விட்டிலா – கக்கநாட் வரை 25 நிமிடங்களில் பயணிக்கலாம்.
படகு பயணத்திற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சமாக 20 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுதவிர அடிக்கடி பயணிப்பவர்களுக்கு, வாராந்திர மற்றும் மாதாந்திர பாஸ்களும் உள்ளன. வாராந்திர பாஸுக்கு 180 ரூபாயும் மாதாந்திர பாஸுக்கு ரூ.600 கட்டணமும் 3 மாதங்களுக்கு ரூ.1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொச்சி ஒன் ஆப் மூலம் டிஜிட்டல் முறையிலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். லித்தியம் டைட்டானைட் ஸ்பைனலால் செய்யப்பட்ட பேட்டரிகள் மூலம் இந்த மெட்ரோ படகு இயக்கப்படுகிறது.

கழிவறை, ஏசி வசதியுடன் இயங்கும் இந்த படகில் உள்ளிருந்தவாறே வெளியில் தண்ணீரின் அழகை கண்டு ரசிக்கலாம். வந்தே பாரத் ரயில்களில் உணவு வகைகள் வழங்குவது போல் மெட்ரோ படகிலும் வழங்கப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா, அதை செயல்படுத்த கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக சிறப்பு இருக்கை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படகில் பயணிக்கும் போது சேஃப்டி ஜாக்கெட்களும் வழங்கப்படும். வாட்டர் மெட்ரோவின் முக்கிய சிறப்பம்சமே மிதக்கும் பான்டூன்கள் எவ்வளவு அலைகள் வந்தாலும், உள்ளே பயணிப்பவர்களுக்கு எந்த அசையும் தெரியாத வகையில் மிதக்கும் பாண்டூன்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கொச்சி நகரம் முக்கிய வர்த்தக நகரமாகும். இங்கு விமான நிலையமும் அமைந்துள்ளது. எனவே இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். இந்நிலையில் கொச்சி துறைமுக நகரத்தில் மெட்ரோ சேவை கொண்டு வந்திருப்பது கேரள மக்களை தாண்டி, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநில சுற்றுலா பயணிகளின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கேரளாவுக்கு சுற்றுலா சென்றால் படகில் பயணிப்பது என்பது சுற்றுலா பயணிகளின் கனவாக இருக்கும். அந்த கனவை குறைந்த கட்டணத்தில் வாட்டர் மெட்ரோ பூர்த்தி செய்யும். எனவே இந்த திட்டம் கேரளாவின் முக்கிய வளர்ச்சித் திட்டமாக அமைந்துள்ளது.
பிரியா
வேங்கைவயல் விவகாரம் : ரத்த மாதிரி தர மறுத்தவர்கள் குற்றச்சாட்டு!