குட்கா பான் மசாலாவிற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு தமிழக அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தடை செய்ய அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து புகையிலை நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
அரசாணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
புகையிலை நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி,
“புகையிலையால் எந்த ஒரு கேடும் இல்லை. வேண்டும் என்றே தமிழக அரசு இதுபோன்ற புகையிலையை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தடை செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில், “தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. குட்காவுக்கு தடை விதித்து தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
பொன்னியின் செல்வன் 2 வெளியீடு : புலம்பும் தியேட்டர் உரிமையாளர்கள்!