அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் அக்கட்சியில் இருந்து விலகி இன்று (ஏப்ரல் 23) எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து சென்றவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை இணைத்துக்கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மறுபக்கம் நாளை திருச்சியில் மாநாடு நடத்த இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அலை கடலென திரண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்தசூழலில் அமமுகவில் செயல்பட்டு வந்த திருச்சி மாவட்ட செயலாளரும், பொருளாளருமான ஆர்.மனோகரன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஆர்.மனோகரன் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
2011 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.மனோகரன். அப்போது தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக இருந்த வைகைச் செல்வன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றதால் ஆர்.மனோகரன் அரசின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார்.
இந்தசூழலில் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்த அவரை 2020ஆம் ஆண்டு கட்சியின் பொருளாளராக நியமித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
தற்போது அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் ஆர்.மனோகரன்.
பிரியா
பிடிஆர் ஆடியோ: ஆளுநரைச் சந்திக்கும் பாஜக!
மாமன்னனுக்காக தேதி மாற்றிய மாவீரன்