வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யாரை பிரதமராக முன்னிறுத்தி ஓட்டு கேட்கும் என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
மதுரை வண்டியூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ‘மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ இன்று (ஜனவரி 7) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முதல்வர் கொச்சைப்படுத்தி பேசுகிறார்!
அவர் பேசுகையில், “எஸ்டிபிஐ கட்சி சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. மதச்சார்பின்மைக்கு அடையாளம் நாங்கள் தான் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கு உண்மையான அடையாளத்தை இந்த மேடையில் காண முடிகிறது.
நான் முதலமைச்சர் ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களை போன்று தான் கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தேன். ஆனால் அதைக்கூட இன்றைய முதல்வர் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
கொள்கைக்கு தான் முன்னுரிமை!
அதிமுக சிறுபான்மையின மக்களை அரண்போல் காத்து நிற்கின்றது. ஆனால் மக்களை பற்றி கவலையில்லாமல் திமுக மத்தியில் கூட்டணி அமைத்துள்ளது. திமுகவிற்கு வேண்டியது அதிகாரம் தான். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி என்று அதிகாரத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணியா, கொள்கையா என்றால் கொள்கைக்கு தான் முன்னுரிமை கொடுப்போம்.
எங்களது கொள்கைக்காக தான் பாஜகவின் கூட்டணியை முறித்துக்கொண்டாம். ஆனால் அதனை முதல்வர் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ளாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார்.
சென்னை இன்று நடந்துவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பொய் பேசி கொண்டிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் எத்தனை ஒப்பந்தங்கள் போட்டு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளீர்கள்? அது குறித்து வெள்ளை அறிக்கை விட முடியுமா?
நான் பட்ட துன்பங்கள்!
அதிமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. கட்சியில் இருந்து வெளியேறிய அவரை (ஓ.பன்னீர்செல்வம்) சகித்துக்கொண்டு தான் ஆட்சி செய்தேன்.
எனது ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்தது எனது அரசு.
ஆனால் இங்கு நடைபெற்று கொண்டிருக்கும் மாநாட்டிற்கு வரவேண்டிய எஸ்டிபிஐ தொண்டர்களை போலீசார் வேறு பகுதிக்கு திருப்பி விடுகிறார்கள். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி திருப்பி விட்டு மைதானத்திற்கு பல இடத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வாகனங்கள் நகர முடியாத சூழலை நாங்கள் பார்த்தோம்.
இந்த மாநாட்டிற்கு எஸ்டிபிஐ தொண்டர்களை அனுமதிப்பதில் இன்றைய ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கு என்ன கஷ்டம் இருக்கிறது? அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதேபோல அதிமுகவின் மாநாடு மதுரையில் நடைபெற்றது. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிட்டத்தட்ட 18 கிலோமீட்டருக்கு வாகனத்தை நிறுத்தி விட்டார்கள். பலர் அரங்கத்திற்கு வர முடியவில்லை. இரவு இரண்டு மணி, மூன்று மணிக்கு வந்து மைதானத்தை பார்த்துவிட்டு சென்றார்கள்.
ஸ்டாலினை பொறுத்தவரைக்கும் கிராமத்தில் சொல்வது போல, ‘சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று போய்விடும்’ என்று நினைக்கிறார். நிச்சயமாக இங்கு இருக்கின்ற எஸ்டிபிஐ தொண்டர்கள் வேறு பகுதிக்கு அனுப்பினாலும் அவர்கள் உள்ளம் உறுதியாக இருக்கிறது. அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
அதிமுக கூட்டணி வெல்ல உழைப்போம்!
இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக அரசு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யாரை பிரதமராக முன்னிறுத்தி ஓட்டு கேட்கும் என்று கேட்கிறார்கள். ஒரிசா மாநிலத்தின் நவீன் பட்நாயக்கோ, ஆந்திர மாநிலத்தின் ஜெகன் மோகன் ரெட்டியோ கடந்த தேர்தலில் பிரதமரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கவில்லை. மக்களுக்கு நியாயமானதை முன்னிறுத்தி ஓட்டு கேட்டார்கள். அவர்கள் வென்றார்கள்.
அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஜெயித்தால், சிறுபான்மையின மக்களுக்காக நிச்சயம் குரல் கொடுக்கும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்லாது, சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெல்ல நாம் அனைவரும் அயராது உழைப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயிலர் 2 : ரஜினிக்காக காத்திருக்கும் நெல்சன்
காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ