மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 11 ) சென்னை வந்தடைந்தார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த மே 9-ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், தேமுதிக துணை செயலாளரும் விஜயகாந்த் மைத்துனருமான எல்.கே.சுதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தநிலையில், பத்மபூஷன் விருதுடன் சென்னை விமான நிலையத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வந்தார்.
அவரை வரவேற்க ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டனர். தொடர்ந்து பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,” கேப்டனுக்கு கிடைத்த பத்மபூஷன் விருதை, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இங்கிருந்து நேரடியாக கேப்டன் கோவிலுக்கு சென்று அவரது காலடியில் விருதை சமர்ப்பிக்க உள்ளோம். பத்மபூஷன் விருதை கேப்டன் டெல்லியில் சென்று வாங்கியிருந்தால், இன்னும் பெருமைக்குரியதாக, எல்லோரும் வரவேற்கக்கூடியதாக இருந்திருக்கும்.
கேப்டன் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு மரண வேதனையை கொடுக்கிறது. கேப்டனுக்கு பத்ம பூஷன் வழங்கிய மத்திய அரசுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு திறந்த வெளி வாகனத்தில் ரோடு ஷோ செல்ல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், போலீசார் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து பிரேமலதா வாகனத்தை அணிவகுத்து செல்ல திட்டமிட்டிருந்த, தேமுதிகவினர் வாகனத்தை பேரிகார்டுகள் அமைத்து தடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பிரேமலதாவின் ரோடு ஷோவிற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குட் நியூஸ் மக்களே! – 11 மாவட்டங்களில் இன்று கனமழை
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய ‘ஸ்டார்’: முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?