பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் தான் இன்றைக்கு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்கவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகவும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் நடை பயணம் மேற்கொள்ள உள்ள ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தை உள்ளூர் ஊடகங்கள் தொடங்கி சர்வதேச ஆங்கில ஊடகங்கள் வரை செய்தியாக்கி வருகின்றனர்.
ராகுல் காந்தி டி சர்ட்டை குறிவைத்த பாஜக!
இந்நிலையில் தான் யாத்திரையின் மூன்றாவது நாள் ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட் ஒன்று பேசுபொருளாக மாறி உள்ளது. பர்பெரி என்ற இங்கிலாந்து ஆடை நிறுவனத்தின் தயாரிப்பான அந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.41,257. இது குறித்து பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ’தேகோ பாரத்’ என்கிற ஹேஸ்டேகில் ராகுல் காந்தியையும், அவர் அணிந்திருக்க கூடிய டி ஷர்டின் ஆன்லைன் விலையையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மோடியின் ரூ.10 லட்ச கோட் சூட் பற்றி பேசலாமே?
இதற்கு காங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே பதிலடி கொடுத்துள்ளது. பாஜகவின் பதிவை ரிட்வீட் செய்து, ”யாத்திரையில் கூடியிருக்கக்கூடிய கூட்டத்தை பார்த்து பயந்துட்டீங்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும், ” பாஜக பணவீக்கம் வேலையின்மை போன்றவற்றைப் பற்றி பேசுங்கள். ஆடையை பற்றி தான் பேசுவோம் என்று அடம் பிடித்தால் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த 10 லட்ச ரூபாய் கோட் சூட் மற்றும் ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி பற்றியும் பேசலாமே?” தனது பக்கத்தில் பாஜகவிற்கு பதிலடியாக குறிப்பிட்டுள்ளது.
காக்கி டவுசரில் கவனம் வைக்கும் பாஜக!
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் டிவிட்டர் பதிவும் வைரலாக பரவி வருகிறது. அவர், “ஒரு கட்சி நாட்டை ஒன்றிணைக்க ஒற்றுமை பயணத்தை முன்னெடுத்து உள்ளது. நாட்டினை பிளவுபடுத்தும் இன்னொரு கட்சியோ, ”காக்கி டவுசரில் மட்டுமே கவனத்தை வைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
பாஜக செய்த பதிவினை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் வார்த்தை போரை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஒருவர் வெளியிட்ட பதிவில், ”ராகுல் காந்தி பரம்பரையாகவே பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் டீ விற்று கொண்டிருந்த பிரதமர் மோடிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய பேனா. ரூ.40,000 மதிப்புடைய கண்ணாடி. ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் சூட் போன்றவை எங்கே இருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்
ராகுல் ஷூ விலையை கேட்டு சொல்லுங்க!
ருவேத் அஹமத் என்ற பயனர் தனது பதிவில், பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை பொறுப்பாளரான அமித் மால்வியாவை டேக் செய்து, ”நடைபயணத்தில் ராகுல்காந்தி அணிந்துள்ள ஷூ எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனை நான் வாங்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் பாஜகவின் தொழில்நுட்ப குழுவிடம் ராகுல்காந்தி அணிந்துள்ள ஷூவின் பிராண்ட் மற்றும் விலைகுறித்து கேட்டு சொல்ல முடியுமா? நீங்கள்தான் ஷூக்களை பற்றி ஆராய்வதில் நிபுணர்கள் ஆயிற்றே.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று பல்வேறு தரப்பினரும் பாஜக வெளியிட்ட ராகுல்காந்தியின் டி சர்ட் குறித்த பதிவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அப்துல் ராஃபிக், கிறிஸ்டோபர் ஜெமா