தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல்வாதியும், பிரபல சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று (ஏப்ரல் 9) காலமானார்.
அதிமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரோடு மிகவும் நெருக்கமானவர்.
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் மேனேஜராக இருந்தவர் ஆர்.எம்.வீ. அதன் பின் சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி, அதிமுகவை உருவாக்குவதில் பங்காற்றியவர், அமைச்சர் என பல உயரங்களைத் தொட்டவர்.
மேனேஜராக இருந்தபோது ஆர்.எம்.வீக்கு மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் அளித்தார் எம்.ஜி.ஆர். கால மாற்றங்களில் ஆர்.எம்.வீ. பல பதவிகளுக்குச் சென்றாலும் மாதாமாதம் எம்.ஜி.ஆரிடம் இருந்து 500 ரூபாய் சம்பளம் ஆர்.எம்.வீக்கு அன்பின் அடையாளமாக சென்று சேர்ந்துவிடும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜானகி அம்மையாரும் மரியாதைக்காக அந்த சம்பளத்தை ஆர்.எம்.வீக்கு தொடர்ந்து அளித்து வந்தார். இந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். குடும்பமே ஆர்.எம். வீ. மீது அலாதியான அன்பு பாராட்டி வந்தனர்.
1991 ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், அதன் பிறகு, ‘எம்.ஜி.ஆர். கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வந்தார்.
அவர் தயாரித்த பாட்ஷா பட வெற்றிவிழாவில் அந்த படத்தின் கதாநாயகன் ரஜினி பேசும்போது, ‘மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாத்த முடியாது’ என்று பேச அது பரபரப்பானது. அந்த விழாவில் இருந்த ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா அதிமுகவை விட்டே ஆர்.எம்.வீ.யை நீக்கினார். அதன் பின்னர்தான் தனக்கு எல்லாமுமான எம்.ஜி.ஆர். பெயரில் எம்.ஜி.ஆர். கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.
ஆர்.எம்.வீ. என அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் ஆர்.எம். வீரப்பன் கடந்த செப்டம்பர் மாதம் 98 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரை வாழ்த்தினார்கள்.
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லக் கூடிய வழியில் வல்லத்திராக்கோட்டைதான் வீரப்பனின் சொந்த கிராமம். அங்குதான் அவரது அம்மா, அப்பா ஆகியோரின் சமாதிகள் உள்ளன.
ஆர்எம்வீயின் தாயார் இறந்தபோது எம்.ஜி.ஆர். அந்த கிராமத்துக்கே சென்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்காக சுமந்து சென்றார். அந்த அளவுக்கு ஆர்.எம்.வீக்கு மிகவும் நெருக்கமானவர் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் அப்பா, அம்மா சமாதிகள் அமைந்திருக்கும் தனது கிராமத்திலேயே அவர்கள் சமாதி அருகே, தனக்காகவே ஒரு சமாதியையும் கட்டியிருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.
பல ஆண்டுகள் முன்பே அந்த சமாதியைக் கட்டியவர், சில வாரங்களுக்கு முன்பு கிராமத்துக்கு சென்று தனக்காக தானே கட்டிய சமாதியை பார்த்துவிட்டு வந்தார்.
சமீபத்தில் தன்னை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் மெல்லிய குரலில் ஒரு வேண்டுகோளை வைத்தார் ஆர்.எம்.வீ.
’நான் இறந்துட்டா என் உடம்பை சொந்த ஊர்லதான் அடக்கம் பண்ணனும். அதுக்கு நீங்க உதவணும்’ என்று கூறியிருக்கிறார்.
உடனே ஸ்டாலின், ‘நீங்க நல்லா இருப்பீங்க… ‘ என்று தைரியம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் தனது 98 ஆவது வயதில் மூப்பு காரணமாக காலமானார் ஆர்.எம்.வீ.
நிறைவாழ்வு வாழ்ந்த ஆர்.எம்.வீ.யின் உடலை அவரது விருப்பப்படியே சொந்த ஊரான வல்லத்திராக்கோட்டைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்
–வேந்தன்
பாஜக இலக்கும்… மாம்பழம் விலையும் : வைரலாகும் முன்னாள் தேர்தல் ஆணையரின் பதிவு!
பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? – பிடிஆர் புது விளக்கம்!