டிஜிட்டல் திண்ணை: திமுகதான் வெல்லும்… அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ஃபைல்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் பாஜக தலைவர் அண்ணாமலையின் விமான நிலைய செய்தியாளர் சந்திப்புகள், தூத்துக்குடி நிர்வாகிகள்  கூட்ட பேச்சு, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி. முனுசாமியின் சட்டமன்ற பேச்சு ஆகிய வீடியோக்கள்  இன்பாக்ஸில் விழுந்திருந்தன.

சில நிமிட விசாரிப்புகளுக்குப் பிறகு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “மார்ச் 23 ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அன்று மாலையே மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. முன்னதாக மார்ச் 17 ஆம் தேதி நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘அதிமுகவோடு கூட்டணி வைத்தால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவேன். தொண்டனாக இருப்பேன்’ என்று பேசியிருந்தார். அதன் பிறகு பாஜகவுக்குள்ளேயே சீனியர்கள் தெரிவித்த கருத்துகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த பின்னணியில்தான் மார்ச் 23 மாலை அமித் ஷாவை சந்தித்தார் அண்ணாமலை.  டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின் போது தான் எடுத்துச் சென்றிருந்த தமிழ்நாடு அரசியல் நிலவரம் பற்றிய ஒரு ஃபைலை அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. அதில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் என்று பல கட்சிகளும்  இதுவரை வாங்கியிருக்கும் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விவரங்கள் இடம்பெற்றிருந்தன. 

‘மற்ற மாநிலங்களின் அரசியல் களம் மாறிவருவதைப் போல தமிழ்நாட்டின் அரசியல் களமும் மாறி வருகிறது.

அந்த அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜகவின் மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால்தான்… 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக குறிப்பிடத் தக்க வளர்ச்சியைப் பெறும். மாறாக 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக  போன்ற பெரிய கட்சியின் கூட்டணியில் ஜூனியர் பார்ட்னராக தொடர்ந்தால் பாஜகவின் வளர்ச்சி தாமதப்படும்’ என்று அமித் ஷாவிடம் கூறிய அண்ணாமலை,

‘நான் முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் மதிப்பீட்டில் சொல்கிறேன். 2024 இல் நமக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் தேவை என்பது முக்கியமானதுதான். ஆனால் நான் சொல்வதுபோல் 2024 இல் பாஜக தலைமையில் தனியான கூட்டணி அமைந்தால்  மக்களவைத் தேர்தலில் திமுகதான் வெல்லும். ஆனாலும்  2026 சட்டமன்றத் தேர்தலில்  பாஜகவுக்கு பெரும் வாய்ப்பு கிடைக்கும். இதுதான் இப்போதைய தமிழ்நாட்டின் நிலைமை. தமிழக பாஜக நிர்வாகிகளின் தொண்டர்களின் கருத்துகளை உங்களிடம் எடுத்து வந்திருக்கிறேன். மற்றபடி தேசிய தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமித் ஷா,  ‘ஒ.கே. நீங்கள் பொது இடங்களில் பேசும்போது கூட்டணிக் கட்சியினர் பற்றி அளவோடு பேசுங்கள்’ என்று அறிவுரை கலந்த எச்சரிக்கை கொடுத்து அனுப்பியிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.

இதன் பிறகு தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை மார்ச் 24 ஆம் தேதி தூத்துக்குடியில், ‘பாஜக என்னும் கிளி கூண்டுக்குள் இருந்து பறக்கத் தயாராக இருக்கிறது’ என்று கூட்டணியை பற்றி மீண்டும் பேசியிருக்கிறார்.

அண்ணாமலையின் சமீபத்திய பேச்சுகளை ரசிக்காத அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி  இந்த டெல்லி பயணத்தின் மீது தீவிர கவனம் வைத்திருந்தார்.  இந்த நிலையில்தான் மார்ச் 24 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளும் திமுகவின் அமைச்சர்களோடு விவாதத்தில் ஈடுபட்ட  அதிமுக துணைப் பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமி, ‘தமிழ்நாட்டில் நீங்கள்( திமுக) எங்களை எதிர்க்க வேண்டும். நாங்கள்  (அதிமுக) உங்களை எதிர்க்க வேண்டும். வேறு யாருக்கும் இங்கே இடமில்லை’ என்ற ரீதியில் பாஜகவை மனதில் வைத்தே பேசியிருக்கிறார்.

ஆக அதிமுகவோடு கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக கூறி வரும் நிலையில்…   ‘பாஜக கூட்டணி  அதிமுகவுக்கு வேண்டாம்’ என்பதைத்தான் முனுசாமியின் சட்டமன்ற பேச்சு எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அண்ணாமலையின் அணுகுமுறை அதிமுகவுக்கு பிடிக்கவே இல்லை.  தமிழகத்தில் பாஜக, அதிமுக இரு தலைமைகளுமே தற்போதைய நிலையில்  கூட்டணியை விரும்பாத நிலையில்…. அமித் ஷாவின் முடிவு என்ன என்பதுதான் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மீண்டும் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: வைரல் வீடியோ!

ராகுல் தகுதி நீக்கம்: எடப்பாடி மௌனம் ஏன்?

+1
0
+1
7
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *