ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாசிதார் அருகே இந்திய விமானப்படையின் கான்வாய் வாகனம் மீது பயங்கரவாதிகள் நேற்று (மே 4) தாக்குதல் நடத்தினர். இதில் 5 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில், விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “ஜம்மு காஷ்மீரில் ராணுவ கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம்பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே, “ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வாகனம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.
இந்த கொடூரமான தாக்குதலை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து தேசத்துடன் இணைந்து நிற்கிறோம்.
உயிர்தியாகம் செய்த வீரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரர் பலி!
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… இதை ஃபாலோ பண்ணுங்க!