வணங்காமுடி
குற்றத்தின் பின்னணியில் கொட்டிக் கிடக்கும் அசிங்கங்கள்!
கடலூர் மத்திய சிறையின் உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்தோடு தீர்த்துக் கட்ட கைதி தனசேகரனுடன் சேர்ந்து திட்டம் போட்டது, அதை ஜாமீனில் வெளியே சென்ற திருநெல்வேலி நாகராஜன் மூலம் துவக்கி வைத்தது, தனசேகரனின் வழக்கறிஞர்களோடு இதுபற்றி தீர ஆலோசித்தது.
சென்னையில் இருந்து வந்த ஆட்களை அழைத்துச் சென்று மணிகண்டனின் வீட்டை காட்டி விட்டது என தான் செய்த அத்தனையையும் சிறையின் தலைமை வார்டன் செந்தில்குமார் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார்.
செந்தில்குமார் வாக்குமூலத்தையும் செல்போன் தொடர்புகளையும் வைத்து, ரவுடி எண்ணூர் தனசேகரனின் வழக்கறிஞர் தினேஷை கைது செய்தனர்.
விசாரணை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ மணிகண்டன், மற்றும் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கரும் அவரது ஸ்பெஷல் டீமும் கைதி தனசேகரனின் வழக்கறிஞர் தினேஷிடம் விசாரணை நடத்தினார்கள்.
தினேஷின் செல்போன் டீட்டெயிலை எடுத்தபோது ஷாக் ஆகிவிட்டனர் போலீஸார். அவர் தனசேகரனின் மனைவி, மகள் ஆகியோரிடம் நெடுநேரம் போனில் பேசியதையும் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கறிஞர் தினேஷ் செல்போனிலிருந்து தனசேகரன் மனைவியிடம் மாதத்தில் 500 முறை பேசியிருக்கிறார், மகளிடம் 400 முறை பேசியிருக்கிறார்.
அதாவது நாள் ஒன்றுக்கு பத்துமுறை குறையாமல் பேசியுள்ளார் தினேஷ், அவர்கள் உரையாடல்களைக் கேட்டால் செவி கூசுகிற அளவுக்கு உள்ளது என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்.
கால் டீடெய்ல்ஸ் இப்படி என்றால் தினேஷின் செல்போன் கேலரி மேலும் அதிரவைத்துள்ளது. தினேஷ் செல்போனிலிருந்த படங்களில் முக்கியமாக ரவுடி தனசேகரன் மகளுடன் முத்தம் கொடுக்கும் வகையில் ஏகப்பட்ட செல்ஃபிகள் இருந்தன.
தனசேகரனுக்கு வழக்கறிஞராக இருக்கிறேன் என்ற போர்வையில் அந்த கைதியின் குடும்பத்துக்குள் புகுந்து சரமாரியாக விளையாடியிருக்கிறார் தினேஷ்.
இது ஒருபக்கம் இருக்கட்டும்… க்ரைம் மேட்டருக்கு வருவோம். தினேஷை முறைப்படி போலீஸ் டீம் விசாரித்ததில் அவர் பல உண்மைகளை கக்கியிருக்கிறார்.
“ஆகஸ்ட் 20ஆம் தேதி நானும் (தினேஷ்) கடலூர் வழக்கறிஞர் அரவிந்தன் இருவரும் ஹோண்டா சிட்டி சிவப்பு நிற காரில் வந்து சிறை உதவி அலுவலர் மணிகண்டன் வீட்டையும் வார்டன் விநாயகம் வீட்டையும் லொக்கேஷன் பார்த்துட்டு போனோம்.
நான் தான் சென்னையிலிருந்து வந்த மனோ என்ற மணவாளன் மற்றும் அவனது நண்பனையும் வார்டன் செந்தில்குமாருடன் அன்றிரவு தொடர்பு படுத்திவிட்டேன்.
தனசேகரன் சித்தி மகன் மதியை தனசேகரன்தான் சட்டம் படிக்க வைத்தார், மதி மற்றும் மௌலிஸ்வரன் இருவர் மூலமாகத்தான் சென்னையிலிருந்து மனோ என்ற மணவாளனையும் அவனது நண்பர்களையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆபரேஷன் நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி வார்டன் செந்தில்குமார், என்னிடம் செலவுக்கு பணம் கேட்டார். உங்கள் வங்கிக் கணக்கில் போடுகிறேன் அல்லது கூகுள் பே நெம்பர் கொடுங்கள் என்று தினேஷ் கேட்டபோது, சேலம் நண்பர் மாதேஸ்வரன் என்பவரின் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்தார் செந்தில்குமார்.
அந்த வங்கிக் கணக்குக்கு ஏடிஎம் மிஷின் மூலமாக முதலில் 5ஆயிரம் அதன் பிறகு 15ஆயிரம் போட்டதும், மாதேஸ்வரன் உடனடியாக செந்தில்குமாருக்கு கூகுள் பே மூலமாக 20 ஆயிரம் அனுப்பியுள்ளார்” என்று சொன்ன தினேஷ்,
போலீஸ் அதிகாரிகளை பார்த்து, “சார்….இந்த மேட்டரையெல்லாம் கூட தனசேகரன்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லுங்க. போலீஸ் அடிச்சதால உண்மைய சொல்லிட்டேன்னு சமாளிச்சுக்குறேன்.
ஆனால் இந்த போன் மேட்டரை மட்டும் தனசேகரன்கிட்ட சொல்லிடாதீங்க சார். அவரோட மனைவி. மகள் ரெண்டு பேரையுமே எனக்கு பிடிக்கும். என்னையும் அவங்களுக்குப் பிடிக்கும்” என்று தினேஷ் சொன்னபோது ஜன்னலுக்கு வெளியே காரி துப்பினார்கள் விசாரணை அதிகாரிகள்.
போலீஸ் வேட்டை தீவிரமானதைத் தொடர்ந்து மதி மற்றும் மௌலீஸ் (படையப்பா) இருவரையும் திருச்சி திமுக வழக்கறிஞர்கள் முயற்சியால், போலீஸிடம் சரண்டர் செய்யவைத்தார்கள். மௌலீஸ், மதியை இருவரையும் தனித்தனியாக வைத்து விசாரித்தனர் விசாரணை அதிகாரிகள்.
மதிதான் சென்னையிலிருந்து ஆட்களை அனுப்பி வைத்தான் என்று படையப்பா சொல்ல, இல்லை இல்லை படையப்பாவுக்குதான் ஆள் தெரியும் அவன்தான் அனுப்பி வைத்தான் என்று மதி சொல்ல, ஒருவழியாக இருவரும் சேர்ந்துதான் செய்தோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டார்கள்.
போலீஸ் வீட்டில் அட்டாக் செய்வதற்கு முதலில் யாரும் முன்வரவில்லை. ’போலீஸ் மேல கையை வச்சுட்டா என்கவுன்டர் செய்திடுவாங்க’ என்று அனைவரும் பயந்தார்கள். அதனால்தான் எங்களை வரச் சொன்னாரு தனசேகரன்” என்றிருக்கிறார்கள் இருவரும்.
தினேஷ் மட்டுமல்ல இந்த மதியும் தனசேகரன் மனைவியிடம் அடிக்கடி போனில் பேசியதை எடுத்து வைத்துக் கொண்ட போலீசார்… விசாரணையின் போது… “மதி நீ ஏன் அடிக்கடி தனசேகரன் மனைவியிடம் தினமும் போனில் பேசியிருக்கிற?” என்று கேட்க, திரு திருவென விழித்திருக்கிறார் மதி. ’அண்ணியிடம் பணம் கேட்பேன் சார்.
இந்த ஆபரேஷனுக்கும் அண்ணி தனலட்சுமிதான் பணம் கொடுத்தாங்க” என்று சொல்ல உடனடியாக தனசேகரன் மனைவி தனலட்சுமியையும் வழக்கில் சேர்த்தது போலீஸ். ஆனால் இப்படியெல்லாம் ஆகும் என்று அறிந்தே தனலட்சுமி தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள்.
போலீஸ் விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
(சிறைக் கதவு திறக்கும்)
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 2
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 3
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 4
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 5
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 6