கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, மன்னார்குடியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வழக்கு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தினசரி விசாரித்து வருகின்றனர். இதுவரை சசிகலா உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
2017ஆம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் சம்பந்தப்பட்டவர்களிடம் சமீப நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணியாற்றிய குணசேகரனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.
அவர் இன்று (ஜூலை 14) கோவை பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு ஆஜரானார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக குணசேகரன் பணியாற்றிய காலத்தில் கொடநாடு பங்களாவுக்கு வேறு யார் எல்லாம் வந்தார்கள்? கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்பு இருக்குமா? ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது என பல கோணத்தில் தனிப்படை போலீசார் குணசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியைச் சேர்ந்தவரான குணசேகரன், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராகச் சிறிதுகாலம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
– கிறிஸ்டோபர் ஜெமா