காங்கிரசின் முக்கிய தலைவரும் கேரளாவின் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று, மார்ச் 24ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது.
மார்ச் 23ஆம் தேதி குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புருனேஷ் மோடி தொடுத்த, ராகுல் காந்தி மீதான கிரிமினல் அவதூறு வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக முப்பது நாட்களுக்கு ராகுல் மீதான கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த நாளான மார்ச் 24ஆம் தேதியே ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.
இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில எதிரியாக கருதப்படும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தொடங்கி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சியாக கருதப்படும் அரவிந்த் கெஜ்ரிவால் வரை ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தமிழ்நாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கண்டனமும் அல்லது கருத்தும் வெளியிட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் முதல் நம்மூர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வரை ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கத்தைக் கண்டித்துள்ளனர்.
ஆனால் கடந்த நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது கட்சியின் செய்தி தொடர்பாளர்களோ மார்ச் 25ஆம் தேதி வரை இந்த பதவி நீக்க நடவடிக்கை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அதிமுகவின் மேல் மட்ட வட்டாரங்களில் விசாரித்தோம்.
“ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இதுகுறித்து ஆலோசித்து இருக்கிறார்கள்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி, நாம் இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பாஜகவுடன் அதிமுக தமிழ்நாட்டில் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையிலும் இந்த பதவிப் பறிப்பு நடவடிக்கையை எதிர்க்க அதிமுக தயாராக இல்லை. அதே நேரம் சட்டம் தான் கடமையை செய்திருக்கிறது என்று சொல்வதிலும் அதிமுகவினருக்கு சிக்கல் இருக்கிறது.
அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது அவர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அதன் தொடர்ச்சியாக முதல்வர் பதவியையும் இழந்தார்.
இன்று வரை இதனை திமுகவின் சதி என்றே அதிமுக சொல்லி வருகிறது. இந்தப் பின்னணியில் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிப்பு நடவடிக்கையை சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லி ஆதரித்தால்… அன்று ஜெயலலிதாவுக்கும் சட்டம் தானே தன் கடமையை செய்தது என்ற எதிர்க்கேள்வி எழும். அது அதிமுகவை தற்போது தர்ம சங்கடப்படுத்தும். இன்னொரு பக்கம் இந்த நடவடிக்கையை எதிர்த்தால் மோடியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
எனவே இந்த விவகாரத்தை கருத்து எதுவும் சொல்லாமல் கடந்து சென்று விடலாம் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் அதிமுக இந்த விவகாரத்தை மௌனமாக கடந்து செல்கிறது” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
வேந்தன்
நான் இரவில் தூங்காததற்கு காரணம் லியோனி தான் – ஸ்டாலின்
’பிரதமர்’ ஸ்டாலின்: ஹெச்.ராஜா டங் ஸ்லிப்!