தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. வேறு எந்த கட்சிக்கும் இடமில்லை என்று சட்டமன்றத்தில் கே.பி.முனுசாமி இன்று (மார்ச் 24) பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவும் ஒருமனதாக பேரவையில் நிறைவேறியது.
இந்நிலையில் பிளஸ்2 மாணவர்கள் 50,000 பேர் தேர்வெழுதாது தொடர்பாக அதிமுக மற்றும் சி.பி.எம் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்டது.
அப்போது தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு யார் பெரும் பங்காற்றியது என்று திமுக, அதிமுக கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
அப்போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசுகையில், “ 35 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித்துறை பெரும் வளர்ச்சியைச் சந்தித்தது” என்றார்.
இதற்கு அமைச்சர்கள் பொன்முடி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்தை பதிவு செய்தனர்.
பின்னர் திமுகவின் சில திட்டங்களை பாராட்டியும், சில திட்டங்களை எதிர்த்தும் பேசிய கே.பி.முனுசாமி, “எவ்வளவுதான் உங்களை (திமுக) பாராட்டினாலும் ஒரு கட்டத்தில் உங்களை நாங்கள் (அதிமுக) எதிர்த்தே ஆக வேண்டும். இதுதான் நிலவரம்.
நாம் இருவரும் தான் சண்டைபோட வேண்டும். அப்போதுதான் எங்கள் இடத்துக்கு நீங்கள் வர முடியும். உங்கள் இடத்துக்கு நாங்கள் வர முடியும். இடையில் வேறு யாரும் இருக்கக் கூடாது” என்று பேசி பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
ஏற்கெனவே அதிமுக – பாஜக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.
மேலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை தவிர வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை என்ற கோணத்தில் கே.பி.முனுசாமி பேசியிருப்பது பாஜகவுக்கு விடுத்த நேரடி மெசேஜ்ஜாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைப்பு!