கொரோனா பொது முடக்கம் காலத்தில் சினிமா ரசிகர்களுக்கும், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த பொதுமக்களுக்கும் பொழுதுபோக பெரிதும் பயன்பட்டது ஓடிடி எனும் வலைத்தளம்.
திரைப்படங்களை திரையரங்குகளில் எப்போது வெளியிட முடியும் என்பதற்கான உத்திரவாதம் இல்லாத அசாதாரமான நிலையில், ஓடிடி தளத்தில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடும் முடிவுக்கு வந்தனர் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
அப்போது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் மீறி ஜோதிகா நடிப்பில் தயாரான பொன்மகள் வந்தால் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
திரையரங்க வெளியீடுக்கு இணையாக ஓடிடி தளங்கள் விஸ்வரூபமெடுத்தன. முண்ணணி ஓடிடி தளங்கள் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை போட்டி போட்டு வாங்க தொடங்கின. வழக்கம் போல சிறு முதலீட்டு படங்களை ஓடிடி தளங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டின.
இதனால் சிறுபட்ஜெட் படங்களை வெளியிட புதிய ஓடிடி தளங்கள் தொடங்கப்பட்டன. இதனால் திரையரங்குகளில் வெற்றி பெறாத திரைப்படங்களுக்கு வரப்பிரசாதமாக சிறிய ஓடிடி தளங்கள் அமைந்தன.
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன.
இதனால் பல நல்ல படைப்புகள் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வராமலே போய்விடுகின்றன. இதற்கு தீர்வாக அறிமுகமானவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஓடிடி பிளஸ்’ துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடலும் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிள் நடைபெற்றது.
மேலும், அடுத்தடுத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் இடம் பெற இருக்கும் படைப்புகளின் முன்னோட்டங்களும் திரையிடப்பட்டன.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “இன்றைக்கு இணையதள வளர்ச்சி, அனைத்தையுமே பார்த்து படிச்சு புரிஞ்சிக்கிற அளவிற்கு வந்துவிட்டது.
இன்றைக்கு பெரும்பான்மையான பெற்றோருடைய கவலை, குழந்தைகளிடம் கொடுத்த போனை எப்படி திரும்ப வாங்குவது என்பதுதான். அப்பா, அம்மா, டீச்சர் என யார் சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான். ஆனால் கூகுள் சொன்னால் கேட்கிறான்.
இப்படி இருக்கும் சூழலில் இந்த இணையதளத்தின் மூலமாக கதைகள், அதன் மூலமாக கருத்துக்கள், நல்ல செய்திகள் சொல்ல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சினிமாவிற்கு புதிய வெளிச்சமாக இந்த ஓ.டி.டி இருக்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பத்தின் வழியாக தமிழ் கதைகள் மக்களை போய் சேர வேண்டும்.
மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில், இப்போது தோன்றியுள்ள இந்த ஓடிடி, நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன். இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று கூறினார்.
‘ஓடிடி பிளஸ்’ இயக்குநர்களில் ஒருவரான கேபிள் சங்கர் பேசும்போது, “ஓடிடி தளங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் தற்போது ஐந்து ஓடிடி தளங்கள் இணைந்துள்ளன. இனிவரும் நாட்களில் பல ஓடிடி தளங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது தான் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ன் நோக்கம்.
குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூபாய் 29 கட்டணத்திலிருந்து ரூ 99, ரூ 199 என அதிகபட்சமாக 299 ரூபாய் வரை ஒரே கட்டணத்தில் அதாவது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் அனைத்து ஓடிடி தளங்களிலும் உள்ள படைப்புகளை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும்.
இதில் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது அதையும் தாண்டி பல மொழிகளில் வெளியான மற்றும் இனிமேல் வெளியாக இருக்கின்ற திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் குறும்படங்கள் என அனைத்தும் இதில் இடம்பெற இருக்கின்றன.
அந்த வகையில் இயக்குனர் கீரா இயக்கத்தில் வெளியான ‘வீமன்’ என்கிற படம் நேரடியாக ஓடிடி பிளஸ்சில் வெளியாகிறது. அதுமட்டுமல்ல ‘பிகினி சமையல்’ என்கிற கவர்ச்சிகரமான ரியாலிட்டி ஷோ ஒன்று ஏழு எபிசோடுகளாக ஆங்கிலத்தில் வர இருக்கிறது” என்று கூறினார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயங்கரவாதிகள் தாக்குதல்: கார்கே, ராகுல் கண்டனம்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரம் உயர்வதற்கான வழிகள்