தயாரிப்பாளர்கள் சங்க விதிகளைத் திருத்தச் சதியா?: என். விஜயமுரளி விளக்கம்!

சினிமா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விதிகளைத் திருத்தச் சதி எதுவும் நடக்கவில்லை என்று சங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

2020ல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 18ல் நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்குச் சங்கத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விதிகளைத் திருத்தச் சதி நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : விதிகளை மாற்றச் சதி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், அது சம்பந்தமாகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர் என். விஜய முரளி நம்மைத் தொடர்பு கொண்டு சில விளக்கங்களைக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “2022 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

செப்டம்பர் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் அப்பொதுக்குழு அழைப்பிதழுடன் சங்கத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்கள் சம்பந்தமான தகவலை உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தக வடிவில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு 21 நாட்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்கிற சங்க விதி கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கக்கூடிய சங்கத்தில் தீர்மானங்கள் பற்றி ஆதரவு, எதிர்ப்பு, திருத்தம் என உறுப்பினர்கள் பேசக்கூடும்.

அதனை ஒழுங்குபடுத்துவது, நேரம் ஒதுக்கீடு செய்வது போகப் பேச விரும்புபவர்கள், தங்கள் நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் கடிதம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

பங்குதாரர்களைக் கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர் நிறுவனங்கள் எனப் பல வகையில் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன.

அந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திப் பேசுபவர்கள் நிறுவனத்தின் அனுமதியோடு பேசுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் கடிதம் அவசியம் தேவை என்பதால் கேட்கப்பட்டுள்ளது.

அதனை குறிப்பிட்ட தேதிக்குள் கேட்பது எப்படி தவறாகும். கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பயப்படவோ, அதிர்ச்சி அடையவோ என்ன இருக்கிறது என்றவர்,


பொதுக்குழு கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கு காவல்துறை பாதுகாப்பு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

கலைஞர் திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடைபெறுவதால் அங்கு பாதுகாப்புக்கு இருக்கும் காவல்துறையைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

தற்போதைய சங்க விதிகளின்படி நிர்வாகிகள் பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. தற்போது கோரப்பட்டுள்ள திருத்தங்கள், நிர்வாகிகள் பதவிக்காலத்தை அதிகரித்தல் இவை எல்லாம் பொதுக்குழுவில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அவையும் அடுத்துவரக்கூடிய தேர்தலில் வெற்றி பெறுபவர்கள்தான் அதனை அமல்படுத்த முடியும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்மொழியப்பட உள்ள திருத்தங்கள், மாற்றங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என கருதுகிறோம்.

tamilnadu flim Producers Union
என். விஜயமுரளி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு ரகசியமாகவோ, அல்லது ஆளுங்கட்சி ஆதரவுடன் நடத்தப்படுவது கிடையாது. ஏனென்றால் எல்லா கட்சியினரும் உறுப்பினர்களாக இருக்கக் கூடிய சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம்.

கட்சி அரசியலுக்கு இங்கு இடமில்லை. அதே போன்று ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி எதனையும் ஒருதலைபட்சமாக அமல்படுத்திட அவசியம் இல்லை என்பதுடன் சாத்தியமும் இல்லை.

ஜனநாயக உரிமைகளைக் கறாராக அமல்படுத்தவும், கடைப்பிடிக்கக்கூடிய சங்கம் அதனால் இங்குச் சதி செய்ய வேண்டிய தேவை இல்லை” என்றார்.

இராமானுஜம்

ரூ.15 கோடி : லைக்கா வழக்கில் விஷாலுக்கு கால அவகாசம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *