ரவிக்குமார் Ways to improve the quality of Tamilnadu Universities
தனியார் கல்வி நிறுவனங்கள்தான் தரமான கல்வியைத் தருகின்றன என்ற பொய்யான நம்பிக்கை மக்களிடம் வலுவாக வேரூன்றி உள்ளது.
ஆரம்பக் கல்விக்கு ஒருவேளை இது பொருந்துமோ இல்லையோ நிச்சயம் உயர் கல்விக்குப் பொருந்தவே பொருந்தாது. உயர்கல்வியில் தரமான கல்வியை வழங்குபவை அரசாங்கக் கல்வி நிறுவனங்கள்தான். இந்த உண்மையை ஆண்டுதோறும் வெளிவரும் ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
உலக அளவில் உயர் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும்போது அதில் இந்தியாவைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் பல இடம்பெற்றுள்ளன. அவ்வாறு இடம் பெற்றிருப்பவை பெரும்பாலும் அரசாங்கக் கல்வி நிறுவனங்கள்தாம்.
இது தொடர்பாக நான் இந்த வாரத்தில் படித்த இரண்டு கட்டுரைகளைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும்:
ஒன்று டெலிகிராப் நாளேட்டில் 03.05.2024 அன்று பல்கலைக்கழக மானியக் குழுவின் மேனாள் தலைவர் எஸ்.கே. தோரட் அவர்கள் எழுதியிருக்கும் For the Nation என்ற கட்டுரை;
இன்னொன்று எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி பத்திரிக்கையின் 2024 ஏப்ரல் 27- ஆம் நாளிட்ட இதழில் எழுதப்பட்டிருக்கும் Takeaways from Global University Rankings என்ற தலையங்கம்.
திரு எஸ்.கே.தோரட்டின் கட்டுரை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சாந்திஶ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்கள் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த கருத்துகளைப் பாராட்டுவதோடு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்ற கல்வி மையமாக மாறியதன் வரலாற்றையும் அதன் பின்னர் அது வீழ்ச்சியுற்றதையும் சுட்டிக்காட்டி மீண்டும் அந்த சிறப்பான நிலைக்கு அந்தப் பல்கலைக்கழகம் வரவேண்டுமானால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் விவரித்திருக்கிறது.
“1970களில் ஜே என் யு கல்வி போதிக்கும் இடமாக மட்டுமின்றி ஆராய்ச்சி மையமாகவும் உயர்ந்தது அது இந்திய பல்கலைக்கழக வரலாற்றில் சிறப்பாக சொல்லப்பட வேண்டியதாகும். 1970களில் துவங்கிய இந்த போக்கு 1990களில் அந்தப் பல்கலைக்கழகத்தை உலகப்புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தோடு ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு உயர்த்தியது.
அதற்கு சமூக ரீதியாக அனைத்து தரப்பினரையும் உள்வாங்கக் கூடியதும், பிராந்திய அளவில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கக் கூடியதுமான மாணவர் சேர்க்கைக் கொள்கை, மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்குப் பின்பற்றப்பட்ட தேர்வு முறைகள், சுதந்திரமான வகுப்பறைச் சூழல் உள்ளிட்ட பல காரணங்களை தோரட் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான சேர்க்கையில் இடஒதுக்கீடு கொள்கையை வெகுகாலத்துக்கு முன்பே ஏற்றுக்கொண்டதன் மூலம் சமூகரீதியாக அனைவரையும் உள்வாங்கும் தன்மை ஜே.என்.யுவில் இருந்தது. குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள், பெண்கள், முதல் தலைமுறையாகப் பட்டப் படிப்பில் சேர்பவர்களுக்குக் கூடுதல் வெயிட்டேஜ் புள்ளிகள் தந்து இடம் கிடைக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் வெயிட்டேஜ் வழங்கப்பட்டது. கல்வியில் நலிவடைந்த மாணவர்கள் மற்றவர்களைப்போல படிப்பதற்கு உதவியாக ஆங்கில மொழிப் பயிற்சியும் முக்கியமான பாடங்களில் தனிப்பயிற்சியும் ‘சம வாய்ப்பு அலுவலகம்’ மூலம் வழங்கப்பட்டன” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார் தோரட்.
“பரவலாக்கப்பட்ட , அனைவரையும் உள்ளடக்கக்கூடிய ஒரு நிர்வாக முறை இந்த பல்கலைக்கழகத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். மாணவர்களை அகடமிக் கவுன்சிலிலும், துறை அளவிலான குழுக்களிலும் உறுப்பினர்களாக நியமிக்கும் நடைமுறையைக் கொண்டிருந்தது. இதுவொரு விதிவிலக்கான அம்சமாகும்.
எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களைக் கலந்தாலோசித்தே பல்கலைக்கழக நிர்வாகம் முடிவுகளை எடுத்தது.” எனக் கூறும் எஸ்.கே.தோரட் “ ஜேஎன்யு அதன் நிலையை மீண்டும் பெற, அதை ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றிய தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கிய மாணவர் சேர்க்கை, கல்வி நடைமுறைகள், பங்கேற்புக்கான வாய்ப்புகள் போன்றவற்றை அங்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்” எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.
எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை அறிக்கை குறித்துப் பேசுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களே இந்தப் பட்டியலில் முன்னிலைப் பெற்றுள்ளன. இந்த முறை இந்தியாவைச் சேர்ந்த 69 பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 55 பாடப்பிரிவுகளுக்கான தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் 44 இடங்களைப் பிடித்துள்ளன. அவ்வாறு இடம் பிடித்துள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை அரசாங்கப் பல்கலைக்கழகங்களாகும்.
‘டெவலப்மெண்ட் ஸ்டடிஸ்’ பாடப்பிரிவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 20 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகம், சென்னை, மும்பை, கரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐஐடிகள் இந்தப் பட்டியலில் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளன” என சுட்டிக்காட்டியுள்ள இந்தத் தலையங்கம், ‘இந்திய அரசின் கல்வித் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு எடுக்கப்படும் NIRF – National Institutional Ranking Framework தரவரிசையில் முதல் 10 இடங்களை அரசாங்கம் நடத்தும் பொதுப்பல்கலைக் கழகங்களே பிடித்துள்ளன. சென்னை ஐஐடி முதலிடம் பிடித்திருக்கிறது’ என்று சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் இந்தத் தரவரிசைப் பட்டியல் என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பின் மாணவர்களையும் உள்ளடக்குவதை ஒரு அம்சமாக வைத்திருக்கவில்லை என்பதை இந்தத் தலையங்கம் எடுத்துக்காட்டுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களைப் போல் நடந்து கொள்வது இந்தியப் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு உதவாது.
இங்கே சமூக நீதி, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் கொள்கை ஆகியவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று அந்தத் தலையங்கம் சுட்டிக் காட்டுகிறது.
திரு எஸ்.கே.தோரட் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலும் சரி, எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியின் தலையங்கத்திலும் சரி, அவர்கள் அழுத்தம் தந்து கூறியிருப்பது,’ உயர் கல்வி நிறுவனங்கள் மேலும் சாதிக்க வேண்டுமென்றால் மாணவர் சேர்க்கைக் கொள்கையில் சமூக நீதி கடைபிடிக்கப்பட வேண்டும், சுதந்திரமான கல்விச் சூழல் இருக்க வேண்டும். கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்ற அம்சங்களைத்தான்.
இந்திய அளவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு ஏற்கனவே இவற்றை ஓரளவு பின்பற்றியதால்தான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளது. உயர் கல்வியில் நாம் எட்டியிருக்கும் நிலையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், இதன் தரத்தை உயர்த்துவதற்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இது உயர் கல்வியின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய பல்கலைக்கழகங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே துவக்கப்பட்டுள்ளன. 2017- 18 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 58 பல்கலைக்கழகங்கள் இருந்தன. 2021- 22 இல் அந்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 4 பல்கலைக்கழகங்கள் புதிதாகத் துவக்கப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் தெலுங்கானாவில் 7 பல்கலைக்கழகங்களும், மகாராஷ்டிராவில் 20 பல்கலைக்கழகங்களும், ஆந்திராவில் 13 பல்கலைக்கழகங்களும், கர்நாடகாவில் 15 பல்கலைக்கழகங்களும் புதிதாகத் துவக்கப்பட்டுள்ளன (AISHE Report 2021-22)
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 62 பல்கலைக்கழகங்களில் 26 பல்கலைக்கழகங்கள் தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகும். மாநில அரசு நடத்தும் பொது பல்கலைக்கழகங்கள் 21 மட்டுமே.
தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் அரசுப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். அத்துடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போன்ற கல்விச்சூழலை இங்கும் உருவாக்க வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு: Ways to improve the quality of Tamilnadu Universities
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… இதை ஃபாலோ பண்ணுங்க!
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்!
இந்திய டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு… எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: மறைவு பகுதிகளில் படரும் கருமை… வீட்டு வைத்தியத்திலேயே விரட்டலாம்!