அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு முதல்முறையாக அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தற்போதைய சூழலில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார்.
திமுக சொத்து பட்டியலை வெளியிட்டது போல அதிமுக சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்று அவர் கூறியது இரண்டு கட்சி நிர்வாகிகளுக்கிடையே வார்த்தை மோதலுக்கு வழிவகுத்தது.
எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அண்ணாமலை பேட்டி கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்துகிறார். அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். ஒரு முதிர்ந்த அரசியல்வாதியை பற்றி கேள்வி கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழக பாஜக, அதிமுக கூட்டணி குறித்தும் வார்த்தை மோதல்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பிறகு டெல்லியில் அதிமுக அலுவலகத்தின் கட்டுமான பணிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
“தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பபெற வேண்டும்”: எடப்பாடி
‘அதிமுக பொதுச்செயலாளர்’: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு!