அமித் ஷா- எடப்பாடி- அண்ணாமலை சந்திப்பு: பக்காவான பத்து விவகாரங்கள்!

அரசியல்

ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் முக்கியமான பத்து விஷயங்களை பார்க்கலாம்.

1. சந்திப்புக்காக எடப்பாடி தேர்வு செய்தவர்கள்

அமித் ஷாவுடனான சந்திப்புக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு எடப்பாடி பழனிசாமி யார் யாரை அழைத்துச் செல்லலாம் என்று ஆலோசித்தார். அப்போது பாஜகவை இதுவரை கடுமையாக எதிர்த்து வரும் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோரை தன்னுடன் அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்தார். வழக்கம்போல தனக்கு எல்லா வகையிலும் நெருக்கமான வேலுமணி, தங்கமணி ஆகியோரையும் தேர்வு செய்தார்.

இந்த சந்திப்புக் குழுவில் பாஜக கூட்டணிக்கு எதிரானவர்களையும், பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வேலுமணி, தங்கமணி ஆகியோரையும் இடம்பெறச் செய்து ஒரு நியூட்ரல் குழுவாக்கினார். இன்னும் சொல்லப் போனால் எடப்பாடியே பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலையில்தான் சமீப மாதங்களாய் இருந்தார்.

2. அமித் ஷா- எடப்பாடி அந்த இருபது நிமிடங்கள்

இந்த சந்திப்பு மொத்தமாக 50 நிமிடங்கள் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி மட்டும் அமித் ஷாவுடன் சுமார் இருபது நிமிடங்கள் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்த சந்திப்பின்போது , ‘அண்ணாமலையின் சமீப கால வெளிப்படையான பேச்சுகள், பேட்டிகளால் அதிமுக-பாஜக கூட்டணி பற்றி இரு கட்சி தொண்டர்களிடையேயும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அவரது வார் ரூம் மூலம் அதிமுக தலைவர்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்.

மோடிஜியே மீண்டும் பிரதமர் என்றுதான் நாங்கள் பொதுவெளியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடரும் என்றுதான் நாங்கள் சொல்லிவருகிறோம். எங்களை ஏன் அவர் இழிவுபடுத்த வேண்டும்?’ என்று அமித் ஷாவிடம் கூறியிருக்கிறார் எடப்பாடி.

3. ஒருங்கிணைந்த அதிமுக- மீண்டும் மறுத்த எடப்பாடி

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே வலியுறுத்திய ‘ஒருங்கிணைந்த அதிமுக’ என்பதை இந்த சந்திப்பின் போதும் எடப்பாடியிடம் அமித் ஷா வலியுறுத்தியிருக்கிறார். ‘அதிமுகவின் பிரிவுகளை நீங்கள் ஏன் ஒன்றிணைக்கக் கூடாது?’ என்று கேட்டிருக்கிறார் அமித் ஷா.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கட்சி எங்களிடம் வலுவாக இருக்கிறது. பிளவுகள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களிடம் எந்த கேடர் பலமும் இல்லை. அவங்க திமுகவின் பி டீம் ஆகத்தான் செயல்படுறாங்க. அதனால அவங்களை அதிமுகவில் சேர்ப்பதில் எந்த பலனும் இல்லை. சில பேரைத் தவிர மற்ற இரண்டாம் நிலை நிர்வாகிகள் எல்லாம் அவர்களாகவே அதிமுகவில் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். எனவே பிளவு என்பதே இனி அதிமுகவில் இல்லை’ என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

4 கூட்டணியை அறிவியுங்கள்- அமித் ஷாவிடம் எடப்பாடி ரெக்வெஸ்ட்

இந்த சந்திப்பின் போது, ‘அதிமுக -பாஜக கூட்டணி தொடரும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் டெல்லி நிகழ்ச்சியில் சொன்னீர்கள். ஆனால் அண்ணாமலை அதற்கு வேறொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதாக உங்கள் தரப்பில் இருந்து அறிவியுங்கள். அப்போதுதான் ஏற்கனவே நம் கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற கட்சிகளையும் மீண்டும் நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க முடியும். சில புதிய கட்சிகளையும் சேர்த்து இப்போதே நாம் கூட்டணியை வலிமையாக்கிட முடியும்’ என்று அமித் ஷாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் எடப்பாடி. அதற்கு அமித் ஷா புன்னகைத்திருக்கிறார்.

5. பிடிஆர் ஆடியோ விசாரணை

தமிழக அமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளியான இரு ஆடியோக்கள் பற்றி குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ‘உடனடியாக அந்த ஆடியோக்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவகாரங்கள் பற்றியும் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

Amit Shah Edappadi Annamalai Meet

இதன் மூலம் திமுகவை மேலும் மேலும் பலவீனப்படுத்த முடியும். அதனால் கால தாமதம் செய்யாமல் இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார் எடப்பாடி.

6. அமித் ஷாவிடம் செந்தில்பாலாஜி பற்றி அடுக்கிய எடப்பாடி

அமித் ஷாவிடம் தற்போதைய தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி ஸ்பெஷலாக சில புகார்களை கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Amit Shah Edappadi Annamalai Meet

அதாவது, ‘இப்போதைய தமிழக அமைச்சர்களில் மிகவும் செல்வாக்கானவராக இருப்பவர் செந்தில்பாலாஜிதான். திமுக தலைமைக்கும் தலைமைக் குடும்பத்துக்கும் நெருக்கமானவராக இருக்கிறார் செந்தில்பாலாஜி. அவர் டாஸ்மாக் நிர்வாகம் நடத்தும் விதம் பற்றி திமுகவினரிடத்திலேயே பெரும் புகார்கள் இருக்கின்றன. பல தொழிற்சங்கங்கள் அவருக்கு எதிராக புகார்கள் கொடுத்திருக்கிறார்கள்.

திமுக அமைச்சர்களில் நிதி செல்வாக்கு மிகுந்தவரும் செந்தில்பாலாஜிதான். ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதற்கு பணம் பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது’ என்று செந்தில்பாலாஜி பற்றி அமித் ஷாவிடம் புகார்களை அடுக்கியிருக்கிறார் எடப்பாடி. ‘நான் பாத்துக்கறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

7. திமுகவுக்கு எதிராக வலிமையாக செயல்பட வேண்டும்- அமித் ஷா

எடப்பாடியின் கோரிக்கைகளை எல்லாம் கேட்டுக் கொண்ட அமித் ஷா, ‘தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு எதிராக நாம் வலிமையாக செயல்பட வேண்டும். உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் செய்து தருகிறோம். திமுகவுக்கு எதிராக அணியை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்த வேண்டும்’ என்று அமித் ஷா சொன்னதும் கையெடுத்து கும்பிட்டு, ‘உறுதியாக செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

8. அண்ணாமலை மாற்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி

அதிமுக நிர்வாகிகள் உடனான சந்திப்புக்கு தமிழ்நாட்டின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை அமித் ஷா வரவழைத்தது எடப்பாடிக்கு ஆச்சரியமாகவும் சர்ப்ரைசாகவும் இருந்திருக்கிறது. டெல்லி சென்றதும்தான் சந்திப்பில் அண்ணாமலையும் இருப்பார் என்று எடப்பாடிக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

Amit Shah Edappadi Annamalai Meet
National

தமிழகத்தில் கூட்டணி பிரச்சினையை பேசும்போது மாநில தலைவர் அண்ணாமலை அருகிலேயே இருப்பது சரியாக இருக்கும் என்று கருதியிருக்கிறார் அமித் ஷா.

அதனால்தான் கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலைக்கு முதல் நாளே போன் செய்து, டெல்லிக்கு வரச் சொல்லியிருக்கிறார். ‘நீங்களே பேசிவிடுங்களேன் ஜி. இங்கே பிரசார வேலைகள் இருக்கிறதே?’ என்று அண்ணாமலை கேட்க, ‘நீங்கள் வந்துவிட்டு போங்கள்’ என்று வலியுறுத்தியிருக்கிறார் அமித் ஷா.

அதன் பிறகே அண்ணாமலை பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த சந்திப்பில் அண்ணாமலையை இடம்பெற வைத்ததன் மூலம், ‘நாங்கள் சொல்வதைத்தான் அண்ணாமலை அங்கே பேசிவருகிறார். அவருக்கும் தேசிய தலைமைக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை’ என்ற தகவலை அதிமுகவினருக்கு மட்டுமல்ல தமிழக பாஜக பிரமுகர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார் அமித் ஷா. இதன் மூலம் கர்நாடக தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அமித் ஷா.

9. கர்நாடக தேர்தலுக்கு நிதி கொடுத்த அதிமுக

இந்த சந்திப்பில் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான விஷயம் கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக சார்பாக தேர்தல் நிதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Amit Shah Edappadi Annamalai Meet

கடந்த 2018 சட்டமன்ற தேர்தலின்போதும் பாஜகவுக்கு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நிதி அளித்தார். அதேபோல இப்போதும் அளிக்க விரும்பியிருக்கிறார் எடப்பாடி. இதுபற்றி உரிய முறையில் நிதிப் பரிமாற்றம் செய்வது பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.

10. இன்னும் அவங்களையே நினைச்சுக்கிட்டிருக்காரே…- எடப்பாடி வருத்தம்!

சந்திப்பு முடிந்து ஹோட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி தன்னுடன் வந்த நிர்வாகிகளிடம், ‘நாம இவ்வளவு சட்டப் போராட்டம் நடத்தி தொண்டர்கள் பலத்தோட பொதுச் செயலாளராகியிருக்கோம். அதிமுகவை முழுசா நம்மகிட்ட வச்சிருக்கோம். ஆனா அமித் ஷா இன்னும் ஒருங்கிணைந்த அதிமுகனு சொல்லிக்கிட்டு அந்த சிறுசிறு கோஷ்டிகளை எல்லாம் ஒரு பொருட்டா நம்பிக்கிட்டிருக்காரே… அவரை அவ்வளவு நம்ப வச்சிருக்காங்க பாருங்க’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: தொடர் சர்ச்சைகள்…வடபழனி முருகனிடம் உருகிய பிடிஆர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

விலையில்லா விருந்தகம்: ரசிகர்களை பாராட்டிய விஜய்

+1
0
+1
2
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *