பாடல் அனைவருக்கும் சொந்தம்: இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து

சினிமா

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் ‘படிக்காத பக்கங்கள்’.  இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 28 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, “ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் அது பாட்டு.

சில நேரங்களில், இசை சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப்புரிந்து கொண்டவன் ஞானி. இதைப்புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” இவ்வாறு பேசினார்.

இதனை கண்ட ரசிகர்கள் இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளதாக இணையத்தில் பதிவிட்டனர்.இதற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன், வைரமுத்துவை எச்சரித்து பேசி ஏப்ரல் 29 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது, “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் நல்லவர் இல்லை. தடுக்க ஆள் இல்லாததால் இப்படி செய்கிறார். இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது. இவ்வாறு பேசினார்.

கங்கை அமரன் பொதுவெளியில் வைரமுத்துக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சரியா என்கிற விவாதம் சூடுபிடித்து நடந்து கொண்டிருக்கிறது. தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, அவரது செலவில் இசையமைத்து கொடுத்து விட்டு காப்புரிமை எனக்கு மட்டும் என்று கூறுவது சரியானதா? அப்புறம் பாடியவர்கள், எழுதியவர்கள், அதற்கு வாயசைத்து நடித்தவர்கள் எல்லாம் காப்புரிமை, ராயல்டி என கேட்டு கிளம்பினால் என்னாவது என்கிற விவாதங்கள் பொது வெளியில் மட்டுமல்லாது நீதிமன்றத்தில் காப்புரிமை சம்பந்தமாக இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் இசை தட்டு நிறுவன வழக்கில் வாத பிரதிவாதங்களும் மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே நடந்து வருகிறது.

அதைப்பற்றி எல்லாம் கருத்து தெரிவிக்காத கங்கை அமரன் திரைப்பட விழாவில் இளையராஜா பெயரை எங்கும் குறிப்பிடாமல் பொதுவாக பேசியதற்கு இளையராஜா எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலையில், சம்மன் இல்லாமல் கங்கை அமரன் ஆஜரானது ஏன் என்கிற கேள்வி சினிமா கவிஞர்கள், இசைகலைஞர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் கவிஞர் வைரமுத்து தனக்கேயுரிய வார்த்தை ஜாலங்கள், வஞ்சப்புகழ்ச்சியுடன் மே தின செய்தியாகவும், கங்கை அமரன் விமர்சனத்திற்கு, மிரட்டலுக்கு பதில் சொல்லும் வகையில் கண் சிவந்தால் மண்சிவக்கும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு, கவிதை ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,
“உழைப்பு, காதல், பசி

இந்த மூன்றுமே

மண்ணுலகை இயக்கும்

மகா சக்திகள்

அந்த உழைப்பு

உரிமை பெற்றநாள்

இந்த நாள்

தூக்குக் கயிற்றுக்குக்

கழுத்து வளர்த்தவர்களும்

குண்டுகள் குடைவதற்காக

நெஞ்சு நீட்டியவர்களும்

வீர வணக்கத்துக்குரியவர்கள்

இந்த சிறப்பு நாளுக்கு

ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

எழுத்து வைரமுத்து

இசை இளையராஜா

குரல் ஜேசுதாஸ்

இந்த பாட்டு

இந்த மூவருக்கு மட்டுமல்ல

உழைக்கும் தோழர்

ஒவ்வொருவருக்கும் சொந்தம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து குறிப்பிட்டுள்ள பாடல் அறிமுக இயக்குனர் ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் 1983 -ஆம் ஆண்டு வெளியான கண் சிவந்தால் மண்சிவக்கும் படத்தில் இடம்பெற்றதாகும். 1983 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 30-வது தேசிய திரைப்பட விருதுகளில் அறிமுக இயக்குநர் இயக்கிய படத்திற்கான இந்திரா காந்தி விருதை பெற்ற இந்தப்படம் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை அடிப்படையாகக்கொண்டது. இப்படத்தில் புதுமுகம் விஜய்மோகன் மற்றும் பூர்ணிமா ஜெயராம் , ஜெய்சங்கர் , ராஜேஷ் , என். விஸ்வநாதன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “பாடல் அனைவருக்கும் சொந்தம்: இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து

  1. பாட்டு எழுதுறது ஒருத்தரு, இசை அமைக்கறது ஒருத்தரு, பாடுறது ஒருத்தரு, இவங்க எல்லாத்துக்கும் பணம் கொடுக்கறது தயாரிப்பாளர். ஆனா தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்ல. காசு வாங்கி இசை அமைச்சுட்டு, தனக்கே உரிமைனு சொன்னா எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *