2024 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 10வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அதற்கு முன், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ருதுராஜ் கெய்க்வாத்தின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 162 ரன்கள் சேர்த்தது.
ஆனால், ஜானி பேர்ஸ்டோ (46 ரன்கள்), ரிலீ ரொசோ (43 ரன்கள்) ஆகியோர் அதிரடியால், இந்த இலக்கை பஞ்சாப் அணி 18வது ஓவரிலேயே எட்டியது.
இப்போட்டியில், சென்னை அணிக்காக முதல் ஓவரை வீச வந்த தீபக் சஹார், 2 பந்துகள் வீசிய நிலையில், திடீரென காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளாராக கருதப்படும் சஹார், இப்போட்டியில் பந்துவீச முடியமால் போனதும் சென்னை அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
காயம் காரணமாக இந்த தொடரின் துவக்கத்திலேயே 2 போட்டிகளை தீபக் சஹார் ஆடவில்லை. தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பந்துவீசாமல் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தீபக் சஹாரின் உடற்தகுதி நல்ல நிலையில் இருப்பது போன்று தோன்றவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். “ஆரம்ப உணர்வு சிறப்பாக இல்லை. அதனால், நான் பிசியோவிடம் இருந்தும், மருத்துவரிடம் இருந்தும் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்”, என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
மேலும், தீபக் சஹார் மீண்டும் எப்போது பந்துவீசுவார் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் ஸ்டீபன் பிளெமிங் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே, சென்னையின் அணியின் மற்றொரு நட்சத்திர பந்துவீச்சாளரான மதீச பத்திரன, காயம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அதேபோல, துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில், தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இப்படியான நிலையில், ஃபிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, மீதமுள்ள 4 போட்டிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ருதுராஜ் மிஸ்ஸிங்…. சுப்மன் கில் ஃபார்ம்-அவுட்: தேர்வுக் குழுவை விளாசிய ஸ்ரீகாந்த்
திருவிழா தகராறு… தீவட்டிப்பட்டியில் நடந்தது என்ன? எஸ்.பி விளக்கம்!