செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர், செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்களை மதிப்பதில்லை என்றும், உழைக்கும் நிர்வாகிகளுக்கு பதவி கொடுப்பதில்லை என்றும், அண்ணாமலை கட்சி நலனை விட தன்னையே முன்னிறுத்திக் கொள்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே, தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, பலரும் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னையா, அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பெண் நிர்வாகிகள், பாஜகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றும், உழைப்பவர்களை மதிப்பதில்லை, பணம் இருப்பவர்களுக்கே மதிப்பு கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், “திறம்பட செயல்படும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஏற்று மாபெரும் இயக்கமான ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.
அதிமுக மட்டுமே எங்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பையும் தரும். வருகின்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க நாங்கள் பாடுபடுவோம்” என்று கூறியுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பவர் ப்ளே…டாப் ஆர்டர்: இந்திய அணிக்கு ஜாகீர் கான் டிப்ஸ்!
பட்டப்பகலில், நடுரோட்டில் படுகொலை: தமிழக பயங்கரம்!