வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த புகைப்படங்கள் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவின் பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வேலை பரபரப்புக்கிடையே ஏப்ரல் 26 ஆம் தேதி அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார் அமித்ஷா.
கடந்த முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தபோது தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று கே.பி. முனுசாமி வருத்தப்பட்ட நிலையில்… இந்த முறை அப்படி யாருக்கும் எந்த வருத்தமும் வந்து விடக்கூடாது என்ற திட்டமிட்டு கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் என்று பரிவாரங்களுடன் டெல்லி சென்றார் எடப்பாடி.
ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த சந்திப்பின்போது இருப்பார் என்ற தகவல் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலைக் கேட்டு லேசாக அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி இது என்ன புதுசாக இருக்கிறது என்று நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சி நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்திப்பது தான் எடப்பாடியின் திட்டம். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருப்பார் என்ற தகவலை எடப்பாடி ரசிக்கவில்லை.
கடந்த சில தினங்களாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணாமலை குறித்து வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார் எடப்பாடி. அண்ணாமலையை பற்றி எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக பேசிய விஷயங்கள் அமித் ஷாவுக்கு உடனுக்குடன் சென்றுகொண்டிருந்தன.
இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் நட்டா ஆகியோரோடு அண்ணாமலையும் அமர்ந்திருக்க அமித்ஷா வீட்டில் எடப்பாடி தலைமையிலான நிர்வாகிகளின் இந்த சந்திப்பு 50 நிமிடங்கள் நடந்தது.
திமுக ஆட்சியில் நடக்கும் சட்டம் ஒழுங்கு குறைபாடுகள், ஊழல்கள் பற்றியெல்லாம் முதலில் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதன் பிறகு, ’அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்று நீங்கள் சொல்லிய பிறகும் தமிழ்நாட்டில் அந்த கூட்டணி பற்றி சந்தேகத்துக்குரிய வகையில் பாஜக தரப்பிலிருந்து பேசி வருகிறார்கள்’ என்பதையும் அமித்ஷாவிடம் தெரிவித்தார் எடப்பாடி. ‘இந்தப் போக்கு நீடித்தால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் இணக்கம் இல்லாமல் போய்விடும்’ என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
அதாவது அண்ணாமலை இந்த கூட்டணியை கெடுக்கிறார் என்பதுதான் எடப்பாடியின் புகார். ஆனாலும் அதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து அமித்ஷாவிடம் சொல்லி இருக்கிறார். மேலும் பன்னீர்செல்வம் பற்றிய சில புகார்களையும் அமித் ஷாவிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
இதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமித்ஷா, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தான் நமது பொது எதிரி. அவர்களை வீழ்த்துவதற்கு உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். அதே நேரம் கூட்டணி விஷயத்தில் நாம் இணையான முக்கியத்துவம் கொண்டவர்கள் தான்.
கூட்டணி பற்றி பரிந்துரைக்க பாஜக தமிழ்நாடு தலைமைக்கும் உரிமை உள்ளது. அவர்கள் வழியாகத்தானே நாங்கள் கட்சி நடத்துகிறோம்’ என்று கூறி இருக்கிறார். இந்த சந்திப்பு முடிந்ததும் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் அப்போதே சிரித்துப் பேசிக் கொண்டனர்.
மறுநாள் ஏப்ரல் 27ஆம் தேதி காலை டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி, ’அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் எந்த தகராறும் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். அமித்ஷா வழிகாட்டுதலின் பெயரில் தான் அண்ணாமலை இப்படியெல்லாம் செயல்படுகிறார் என்ற மெசேஜ் நேற்றைய சந்திப்பின் மூலம் எடப்பாடிக்கு சொல்லப்பட்டு விட்டது. அதேநேரம் அதிமுக பாஜக கூட்டணி பற்றிய உத்தரவாதமும் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை விவகாரத்தை மட்டும் வைத்து இந்த சந்திப்பை எடை போடக்கூடாது என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். ’அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்திருக்கிறார் என்பதன் மூலம் எடப்பாடி தான் அதிகாரபூர்வமான அதிமுக என்பதற்கு அரசியல் ரீதியான ஒப்புதலை பாஜக அளித்துவிட்டது.
மேலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கும் இது அச்சாரமாக இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் ரீதியாக நீதிமன்றத்தின் ரீதியாக மட்டுமல்லாமல் பாஜகவின் அரசியல் ரீதியாகவும் அதிமுக எடப்பாடி வசம் 100 சதவீதம் வந்துவிட்டது என்பதை வெளிப்படுத்தும் சந்திப்புதான் இது’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இனி தமிழக பாஜக -அதிமுக வாக்குவாதங்கள் குறைந்து இருவரும் சேர்ந்து திமுகவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவார்கள் என்பதே டெல்லி சந்திப்புக்குப் பிறகான நிலைமை” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
“புதுவையில் பெண்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு”: தமிழிசை
143 தயாரிப்பாளர்கள் ரிஜெக்ட் செய்த ‘டைனோசர்ஸ்’ கதை!