பொது சிவில் சட்டம்: மோடிக்கு எடப்பாடி எதிர்ப்பு!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தனது முக்கிய அஜண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டமும் இருந்தால் அந்த குடும்பம் நன்றாக இருக்குமா? அது போல வெவ்வேறு சட்டங்களுடன் நாடு இருந்தால் எப்படி வளர்ச்சிக் காண முடியும்? ஆகவே இந்தியாவில் பொது சிவில் சட்டம் அவசியம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன“ என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதாக இப்போது வரை கருதப்படும் அதிமுக பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அதிமுக மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பொதுசிவில் சட்டத்திற்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டோம். அதுதான் தற்போதும் எங்களுடைய நிலைப்பாடு” என்று கூறினார்.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு கட்சி தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக அதிமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர், “மேகதாதுவில் அணை விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் தற்போது கர்நாடகாவில் புதிதாய் ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவின் தொடர் சட்டப்போராட்டத்தின் விளைவாகத்தான் உச்சநீதிமன்றத்தில் அந்த தீர்ப்பை பெற முடிந்தது.
அந்த தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுமார் 22 நாட்கள் குரல் கொடுத்தனர், இதனால் நாடாளுமன்ற அவையே ஒத்திவைக்கப்பட்டது.
இது ஒரு சரித்திர சாதனை. விவசாயிகள் உரிமை,பொதுமக்கள் உரிமை, நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் முழுவதும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு குரல் எழுப்பியதன் விளைவாகத்தான் காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை முறையாக கொடுத்தார்கள்.
ஆனால் தற்போது ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்காமல் தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்ற செய்திகளை வெளியிட்டுள்ளார் என்றே நான் கருதுகிறேன்” என்றார்
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவத் துறையில் பத்தாண்டு காலங்களில் அதிமுக பெரிய சாதனைகளை செய்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த அதிமுக அரசு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய அளவில் விருதுகளை பெற்றது.
கொரோனா காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றியது அதிமுக அரசு தான். பிரதமர் மோடியே தமிழ்நாடு தான் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலமாக இருக்கிறது என்று சொன்னார்.
ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற திமுகவினர் தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெறும் பேட்டி மட்டும் தான் கொடுக்கிறார். நிர்வாகத்திறமையே அவரிடம் இல்லை. இரண்டாண்டு காலத்தில் மருத்துவ துறை சீரழிந்துவிட்டது.
சென்னையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது வேதனைக்குரிய விஷம். குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரத்தில் உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கடலூரில் சளி பிரச்சனைக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா. இந்த அரசு எவ்வளவாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்…தமிழனாக பெருமை: அமைச்சர் அன்பில் மகேஷ்
மதுரை அதிமுக மாநாடு இலச்சினை வெளியீடு!