வைஃபை ஆன் செய்ததும் வாய்ஸ் மெசேஜுகள் சில வந்திருந்தன. அவற்றைக் கேட்டபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
“சர்ச்சை நாயகனாக இருக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இப்போது திமுகவில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
ஏப்ரல் 19 ஆம் தேதி, 25 ஆம் தேதிகளில் பிடிஆர் குரல் என்று வெளியான இரு ஆடியோக்களால் தமிழ்நாடு அரசியல் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிடிஆர் தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் அறிவுஜீவிகளில் ஒருவர், பொருளாதாரத்தைப் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டு ஒன்றிய அரசையே திணறடிப்பவர். இதனாலேயே அவரை பாஜக டார்கெட் செய்து வருவதாக திமுக தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
பிடிஆர் இரு ஆடியோவுக்கும் இரண்டு விளக்கங்கள் கொடுத்த பின்னரும் இதில் திமுக தலைமை என்ன நினைக்கிறது என்ற கேள்விகள் கட்சிக்குள் எழுந்தன. நேற்று (ஏப்ரல் 27) மின்னம்பலத்தில் ‘ரிசைன் பண்ணுங்க’ பிடிஆருக்கு ஸ்டாலின் உத்தரவு என்ற செய்தி வெளியானது. இதையடுத்து நடக்க இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆரும் ஒரு விக்கெட்டாக வாய்ப்பிருக்கிறது என்பது வரை திமுக வட்டாரத்தில் சூடாக விவாதிக்கப்படுகிறது.
பொதுவாகவே அமைச்சர் பிடிஆருடன் சக அமைச்சர்கள் யாரும் மனம் விட்டு பேசுவது கிடையாது. இப்படிப்பட்ட ஆடியோ சர்ச்சையில் சிக்கிய இந்த சூழலில் பிடிஆருக்கு எந்த அமைச்சரும் போன் செய்து விசாரிக்கவோ, நேரில் சந்தித்து விசாரிக்கவோ இல்லை. அதேநேரம் பிடிஆருக்கு நெருக்கமான அவரது நண்பர்கள் அவருக்கு போன் செய்தும் நேரில் சந்தித்தும் வருகிறார்கள்.
அவர்கள் பிடிஆரிடம், ‘இந்த விவகாரத்துல தலைமை என்ன சொல்லுதோ அதன்படி நடந்துக்கங்க. உங்க மேல தப்பு இல்லைனு நாங்க நம்புறோம். ஆனா இந்த சர்ச்சையை நீடிக்க விடக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். தன்னை சந்திக்கும் எவரிடமும், ‘இந்த ஆடியோ தேர்ட் ரேட் டீப் ஃபேக்’ என்பதையே அழுத்தம் திருத்தமாக சொல்லிவருகிறார்.
பொதுவாக இரவு 8 மணிக்கு மேல் நண்பர்களையோ அரசியல் ரீதியான பார்வையாளர்களையோ பார்க்க மாட்டார் அமைச்சர் பிடிஆர். இப்போது மாலை 5 மணிக்கு மேல் யாரையும் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று தனது உதவியாளர்களிடம் சொல்லிவிட்டார்.
என்னதான் உறுதி படைத்தவராக இருந்தாலும் பிடிஆர் சமீப நாட்களில் நடக்கும் நிகழ்வுகளால் மனம் உடைந்துபோய்தான் இருக்கிறார். அதனால் இன்று (ஏப்ரல் 28) வெள்ளி காலை 11.30 மணியளவில் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றார். பிடிஆர் கோயிலுக்கு சென்றபோது முருகன் சந்நிதியில் திரைபோடப்பட்டிருந்தது.
கொஞ்ச நேரம் சந்நிதி வாசலில் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார். பிறகு திரை விலக்கப்பட்டவுடன் முருகனை கையெடுத்து கும்பிட்டு உருகி வழிபட்டார் பிடிஆர். அவருடன் குடும்பத்தினர் யாரும் வரவில்லை, உதவியாளர்கள்தான் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கோயிலுக்குள் இருந்துவிட்டு அமைதியாக புறப்பட்டுள்ளார் பிடிஆர்.
சென்னை வடபழனியில் இப்படி என்றால் பிடிஆரின் நலம் விரும்பிகள் சர்ச்சைகளில் இருந்து அவர் விடுபடுவதற்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வழிபாடும் சிறப்பு அர்ச்சனையும் நடத்தியிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அமித்ஷா பஞ்சாயத்துக்கு பிறகும் தொடரும் அதிமுக – பாஜக புகைச்சல்!
பொன்னியின் செல்வன் 2: விமர்சனம்!