குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது மொச்சை. கர்நாடகா ஸ்பெஷல் டிஷ்ஷான இந்த மங்களூர் மொச்சை கிரேவியை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
உரித்த ஃப்ரஷ் மொச்சை – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 15
பெரிய வெங்காயம் – ஒன்று
தேங்காய்த் துருவல் – கால் கப்
கசகசா – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
வறுத்து அரைக்க…
முழு மல்லி (தனியா), சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
மிளகு – கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வறுத்து அரைக்க வேண்டியதை விழுதாக அரைத்துக்கொள்ளவும். தேவையானவற்றில் கொடுத்துள்ள தேங்காய்த் துருவல் மற்றும் கசகசாவை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுடன் தணலில் காட்டி, தோல் கருகும் வரை சுட்டெடுக்கவும். பிறகு, தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் வறுத்து அரைத்த விழுது, வெங்காய விழுது, மொச்சை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கலவை ஒரு கொதி வந்ததும் மூடி, 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய்-கசகசா விழுதைச் சேர்த்துக் கிளறி கொதி வந்ததும் இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குடிநீர் தொட்டியில் மலம்..? ‘காக்கா தான் காரணம்’ : ஆட்சியர் விளக்கம்!
வந்தாச்சு இ-மெயில் வெரிபிகேஷன் முறை…. அறிமுகப்படுத்தியது வாட்ஸ்ஆப்!