அரசு பேருந்தில் கீழ் பலகை உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியே விழுந்த பெண்மணி விபத்தில் சிக்கியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 7) முறையிடப்பட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் வரை இயக்கப்பட்ட மாநகரப் பேருந்தில் நேற்று அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்த போது கடைசி இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து விழுந்தது.
அதனால் ஏற்பட்ட ஓட்டை வழியாக இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அப்பெண் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்செய்தி ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானதை அடுத்து, இந்த விபத்து தொடர்பாக பேசின் பிரிட்ஜ் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர், தொழில்நுட்ப பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டார்.
சென்னை மாநகரில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் மேற்கூரை மற்றும் பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து குறித்து செய்தித்தாள்களில் இன்று வெளியான செய்தியை வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காண்பித்து, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார்.
மேலும் போக்குவரத்துத் துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக அவர் கூறியதை அடுத்து நீதிபதிகள், இதுகுறித்து பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஐடி பங்குகள் வீழ்ச்சி : சரிவில் முடிந்த பங்குச்சந்தை வர்த்தகம்!
வெற்றி துரைசாமிக்கு என்னாச்சு? தர்மம் தலைகாக்க வேண்டும்- இதயத்தை உலுக்கும் இமாச்சல் விபத்து!