மும்பையின் தொடர் வெற்றியை தடுக்குமா பஞ்சாப் அணி!

விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளின் 16 வது சீசன் ரசிகர்களின் ஆதரவுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான 30 வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஏப்ரல் 22) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 31 வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

தொடக்கத்தில் பெங்களூரு, சென்னை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த மும்பை அணி டெல்லி, கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தும்.

கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக அந்த அணியில் இருக்கின்றனர். சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

நடுவரிசையில் திலக் வர்மா, டிம் டேவிட் நல்ல பங்களிப்பை கொடுத்தால் கணிசமான ரன்களை சேர்க்கலாம்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்றைய போட்டியில் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெஹ்ரென்டார்ஃப், மெரிடித், பியூஷ் சாவ்லா ஆகியோரும் பந்துவீச்சில் பலம் சேர்க்கிறார்கள். அத்துடன் மும்பை அணி சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக இளம்வீரர் சாம்கரன் அணியை வழிநடத்துவார்.

ஷிகர் தவான் விளையாடாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக இருக்கும்.

நடப்பு சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 3 வெற்றி, 3 தோல்வியை சந்தித்துள்ளது.லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற சிக்கந்தர் ராசா, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறக்கப்படவில்லை. எனவே அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் பிற வீரர்கள் ரன் சேர்க்க தவறுகின்றனர். பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே, அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

கடந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மானிய கோரிக்கையை விமர்சித்த காவலர்கள் பணியிடை நீக்கம்!

12 மணி நேர வேலை: கலைஞர் சொன்னதை மீறிய ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *