மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16வது ஐபிஎல் சீசன் மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் நேற்று (ஏப்ரல் 2) இரவு நடைபெற்ற 5வது லீக் போட்டியில் 5 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்த சீசனிலாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளஸில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங்கிற்கு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்கமே மோசமாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான இசான் கிசான் 10 ரன்களிலும் கேமரூன் கிரீன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ரோகித் ஷர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து தடுமாறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் ஆட்டமிழந்ததால் மும்பை அணிக்கு ரன்களை சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால், இந்த பதட்டமான நேரத்தில் களமிறங்கிய திலக் வர்மா – நேஹல் வாதேரே ஜோடி 5வது விக்கெட்டிற்கு 50 ரன்களை குவித்தது. அதில் வாதேரே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டிம் டேவிட் 4, ரித்திக் ஷாக்கீன் 5, என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
ஆனால் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட திலக் வர்மா பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி தனி ஒருவனாக 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84 ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார். அவருடன் இணைந்து 15 ரன்கள் எடுத்திருந்த அர்சத் கான் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி – டு பிளஸில் ஜோடி நல்ல ஓப்பனிங்கை கொடுத்தனர். குறிப்பாக 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி பந்துகளைப் பறக்கவிட்டு மும்பை பவுலர்களை திணறடித்தார்.
அதிரடியான தொடக்கத்தை அளித்த இந்த ஜோடி அர்சத் கான் பந்துவீச்சில் பிரிந்தது. 43 பந்துகளுக்கு 73 ரன்கள் எடுத்திருந்த டு பிளஸில் ஆட்டமிழந்து வெளியேறினார். 148 ரன்களை குவித்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பெங்களூரு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையும் படைத்தது.
அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானாலும் கடைசி வரை அதிரடியாகவும் சிம்ம சொப்பனமாக விளையாடிய விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 82 ரன்களை குவித்தார். அவருடன் 2 சிக்சர் அடித்து 12 ரன்களுடன் கிளன் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
16.2 ஓவரிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற கனவிற்கான முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
மோனிஷா
சிலிண்டர் விலை உயர்வு: நிர்மலா சீதாராமன் அளித்த பதில்!
ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அன்புமணி கேள்வி!