தோனி களமிறங்கும் போது விளையாட்டு மைதானங்களில் ரசிகர்கள் எழுப்பும் அதிர்வு முழக்கம் தற்போது இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கும் கிடைத்திருப்பது கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை மற்றும் தற்போது இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
புறக்கணிக்கும் பிசிசிஐ
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு தொடர்ச்சியான வாய்ப்புகளை மறுத்து வருகிறது.
இருப்பினும் மனம் தளராமல் கடினமாக உழைத்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக விளையாடினார்.
இந்த வருடம் இந்தியாவுக்காக விளையாட கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு முதல் முறையாக அரை சதமும் ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தினார்.
ஆனாலும் டி20 உலக கோப்பைக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டதால் ரசிகர்களின் கோபத்தை தணிப்பதற்காக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று (செப்டம்பர் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய ஏ அணி வெற்றி
இந்த போட்டியில் நியூசிலாந்து ஏ அணியை இந்திய ஏ அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (29) ராஜத் பட்டிதார் (45 ) ஆகியோரின் அதிரடியால் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.
சூப்பர் வரவேற்பு
இந்நிலையில், இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கிய போது,ரசிகர்கர்கள் “சஞ்சு… சஞ்சு.. சஞ்சு..” என கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு தான் இது போன்ற சிறப்பு கிடைத்துள்ளது.
தற்போது சஞ்சுக்கு வழங்கப்பட்டது, தோனியையே பார்த்தது போன்று இருந்தது என்கிறார்கள் ரசிகர்கள்.
கடைசி நேர சிக்ஸர்
ரசிகர்களின் ஆதரவுக்கு ஏற்றவாறு சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடினார்.இந்தியா 103/3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, களமிறங்கிய சஞ்சு சாம்சன், நிதானமாக விளையாடி அணியை கரை சேர்த்தார்.மேலும் தோனியை போலவே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெற்றியுடன் முடித்து கொடுத்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்