உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டி20, ஒரு நாள், டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நியூசிலாந்து, அயர்லாந்து, இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார்.
மேலும் 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
2023-ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் ஆல் ரவுண்டராகவும் அணியை வழிநடத்தி செல்வதிலும் பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் ஹர்திக் பாண்டியா உலக கோப்பை போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி வீக் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய அணியில் சீனியர்களை வெளியேற்றி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரமிது.
குறிப்பாக டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி பொருந்திபோகுமேயானால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி வீரர் லான்ஸ் குளுசினர் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்க கூடியவர் என்று கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க வேண்டும் என்ற ரவி சாஸ்திரியின் கோரிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமான விவாதப்பொருளாகியுள்ளது.
செல்வம்
ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!