2023 ஒருநாள் உலகக்கோப்பையின் 8வது போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதிரடியால் மிரட்டிய மெண்டிஸ் – சமரவிக்ரமா இணை
இதை தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் குஷல் பெரேரா 2வது ஓவரிலேயே டக்-அவுட் ஆன நிலையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பதும் நிசங்கா 51 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கம் கொடுத்தார்.
அவருடன் இணைந்து, ரன்களை அள்ளிக் குவித்த குஷல் மெண்டிஸ், 65 பந்துகளில் சதம் கடந்து மிரட்டினார். இதன்மூலம், இலங்கை அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
நிசங்கா விக்கெட்டிற்கு பிறகு, குஷல் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த சதீரா சமரவிக்ரமாவும் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடி, 82 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார்.
மெண்டிஸ் 122 ரன்களுக்கும், சமரவிக்ரமா 108 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பின் களமிறங்கிய யாரும் பெரிதும் சோபிக்காததால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானுக்காக ஹசன் அலி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலடி கொடுத்த ரிஸ்வான் – சஃபீக் இணை
345 ரன்கள் என்ற ராட்சத இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு, இமாம்-உல்-ஹக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால், அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபீக், பாகிஸ்தான் அணிக்கு யாரும் எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி, 3வது விக்கெட்டிற்கு 176 ரன்கள் சேர்த்து, ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அப்துல்லா சஃபீக் 113 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுமுனையில் இருந்த முகமது ரிஸ்வான், பின் களமிறங்கிய சவுத் ஷகீல் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோருடன் இணைந்து தனது அதிரடியை தொடர்ந்தார். இதன் காரணமாக, 49வது ஓவரில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல், 122 ரன்கள் சேர்த்து, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முகமது ரிஸ்வான், இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
பாகிஸ்தானின் சாதனைகள் என்ன?
இதன்மூலம், உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களை விரட்டி வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. முன்னதாக, 2011 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 327 ரன்கள் என்ற இலக்கை அயர்லாந்து எட்டியதே சாதனையாக இருந்தது.
உலகக்கோப்பை தொடர்களில், இதுவரை இலங்கை அணியிடம் தோல்வியையே சந்திக்காத பாகிஸ்தான் அணி, அந்த சாதனையை தொடர்கிறது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில், இலங்கை – பாகிஸ்தான் அணிகள் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 8 முறையும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
முரளி
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
”இது மகளிருக்கான அரசே கிடையாது”: குண்டுக்கட்டாக கைது… செவிலியர்கள் ஆதங்கம்!