தொலைத்த காதலின் அடையாளம்!
சில படங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உருவாவதற்கு, அவற்றின் டைட்டில் காரணமாக இருக்கும். இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாததாக இருப்பது அதற்கான முதல் தகுதி. அந்த தலைப்பு, அப்படம் எத்திசை நோக்கிச் செல்லும் என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடும். முழுமையாக ஒரு படத்துக்குள் நம்மைக் கரைத்துவிடத் தயார்படுத்தும்.
சுருக்கமாகச் சொன்னால், படம் பார்ப்பதற்கு முன்பே சபாஷ் போட வைக்கும் அற்புதமான உத்திகளுள் ஒன்று அது. அந்த வகையில், ‘தண்டட்டி’ என்ற பெயரைக் கேள்விப்பட்டவுடனேயே அதனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமானது. பெயருக்கேற்றவாறு வித்தியாசமான, சுவாரஸ்யமான, சிலாகிக்கிற ஒரு படைப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதா?
பிறாண்டும் சொந்தங்கள்!
ஐம்பதைத் தாண்டிய ஒரு பெண்மணி காணாமல் போகிறார். அவரைப் பற்றி புகார் கொடுக்கக் காவல்நிலையத்திற்கு வருகிறார் பேரன். ஆனால், போலீசாரோ அதனை வாங்க மறுக்கின்றனர். காரணம், அவர் சார்ந்திருக்கும் கிராமம்.
அந்த ஊரில் போலீசாரை உள்ளே விடாமல், அங்கிருப்பவர்களே பஞ்சாயத்து பேசி அனைத்தையும் முடிவு செய்துவிடுவார்கள். மீறி போலீஸ்காரர்கள் வந்தால் அடித்து விரட்டிவிடுவார்கள். ஆனாலும், அந்த பேரனின் கெஞ்சலைப் பொறுக்கமாட்டாமல் அவரது பாட்டியைக் கண்டுபிடித்து தருவதாக உறுதியளிக்கிறார் ஒரு போலீஸ்காரர்.
ரொம்பவே நேர்மையான, கெடுபிடியான, யாருக்கும் பயப்படாதவர் என்ற பெயரைப் பெற்றவர் அந்த போலீஸ்காரர். பத்து நாட்களில் பணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறவர். இன்ஸ்பெக்டர், உடன் பணியாற்றும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அந்த ஊருக்கு விசாரணை செய்யச் செல்கிறார் அந்த போலீஸ்காரர்.
வாக்குறுதி தந்தவாறே, அந்த பெண்மணியைத் தேடிப் பிடிக்கிறார். அதற்கடுத்த சில மணி நேரத்தில் அப்பெண்மணி இறந்து போகிறார். அவரது ஊரில் ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இறுதிவரை இருந்து எந்தப் பிரச்சனையும் எழாமல் ஈமச்சடங்கை நடத்த உடனிருக்குமாறு வேண்டுகிறார் அந்தப் பேரன். அந்த போலீஸ்காரரும் சம்மதிக்கிறார்.
இறந்துபோன பெண்மணிக்கு 4 மகள்கள். இரண்டு மகன்கள். அத்தனை சொந்தங்களும் அந்தப் பெண்ணின் காதில் தொங்கும் தண்டட்டியையே குறி வைக்கின்றன. அடுத்தநாள் காலையில், அந்த மூதாட்டியின் காதில் இருந்த தண்டட்டியைக் காணவில்லை. யார் திருடியது? அந்த போலீஸ்காரர் விசாரிக்க, ஊர்க்காரர்கள் அதனை எதிர்க்க, முடிவில் தண்டட்டி கிடைத்ததா இல்லையா என்பதோடு படம் முடிவடைகிறது.
உயிரோடிருக்கும் வரை அந்தப் பெண்மணியைப் பிறாண்டிய சொந்தங்கள், இறந்தபிறகும் அதனைத் தொடர்கின்றன. அதற்கு மத்தியில், தண்டட்டியை யார் எடுத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பின்னால் திரிகிறது கதை. அதனை இருண்மை கலந்த நகைச்சுவையாகச் சொல்லியதில் வித்தியாசப்படுகிறது ‘தண்டட்டி’.
தொலைத்த காதல்!
இந்தக் கதையில் அந்தப் பெண்மணிக்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு. அவரது காதலர் ஆணவக்கொலை செய்யப்படுகிறார். அவர் வாங்கித் தந்ததுதான் அந்த தண்டட்டி. அதாகப்பட்டது, அந்த அணிகலன் அப்பெண் தொலைத்த காதலின் அடையாளம். படத்தில் அந்த பிளாஷ்பேக் பகுதியும், தண்டட்டி உருவாவதைச் சொல்லும் டைட்டில் காட்சியும் மிகச்சிறப்பானவை. அவற்றின் முக்கியத்துவம் படம் முடிவடையும்போது நமக்குப் பிடிபடும். அந்த இடத்தில்தான், தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை நிரூபிக்கிறார் ராம் சங்கையா.
இந்தப் படத்தின் மாபெரும் பலவீனம், தொடக்கத்தில் வரும் காட்சிகள் மெதுவாக நகர்வது. காணாமல்போனவரை போலீஸ்காரர் கண்டறிவதுதான் கதையில் வரும் முதல் திருப்பம். அப்போதும் திரைக்கதை மெதுவாகவே பயணிக்கிறது. தண்டட்டி தொலைந்தபிறகே வேகமெடுக்கிறது.
இறுதிக்கட்டத்தில் வரும் திருப்பங்கள் நம்மை முழுமையாகத் திருப்திப்படுத்துகின்றன. ஆனால் ஒரு ஆழமான, செறிவுமிக்க படைப்பைப் பார்க்கும் உணர்வு கிடைக்கவில்லை. காரணம், சினிமாவுக்கான அழகியலைத் துறந்து மொபைலில் படம்பிடிக்கப்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும் காட்சியாக்கம்.
இப்படிக் குறைகளை உற்றுநோக்கினால், இன்னும் சில தெரிய வரலாம். ஆனால், இடைவேளைக்குப் பிறகு அந்த எண்ணத்தை மறக்கடிக்கிறது திரைக்கதை நகரும் விதம். ஒரு துக்க வீட்டில் நிகழும் களேபரங்கள் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அதற்கான காரணம்.
’ஆஹா’ பசுபதி!
விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், ஈ, வெயில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சார்பட்டா பரம்பரை என்று சிகரம் தொட்ட பசுபதியின் நடிப்பில் இன்னொரு மைல்கல்லாய் அமைந்திருக்கிறது ‘தண்டட்டி’.
மொத்தக் கதையையும் தன் தோள் மீதேற்றிக்கொண்டு, அவர் ஆடும் ஆட்டம் ‘ஆஹா’ ரகம்! இந்தப் படத்தில் தங்கப்பொண்ணு எனும் வேடத்தில் நடித்திருக்கும் ரோகிணிக்கு மிகச்சில காட்சிகள்தான். ஆனாலும், தான் வாழ்ந்து தீர்த்த மனுஷி எனும் உணர்வை முகத்தில் கொண்டுவந்திருப்பது அவரது மேதைமைக்குச் சான்று.
விவேக் பிரசன்னா, தீபா சங்கர், செம்மலர், அம்மு அபிராமி உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். அது போக ஊர்க்காரர்கள், உறவினர்கள், ஒப்பாரி வைக்கும் கிழவிகள் என்று திரை முழுக்க மக்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்களில் சிலரை மட்டும் வசனம் பேச வைத்திருக்கிறார் இயக்குனர். அவர்களனைவருமே வித்தியாசமான பாத்திர வடிவமைப்பினால் நம்மை எளிதாக வசீகரிக்கின்றனர்.
எது பலவீனமோ அதுவே பலம் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படித்தான் ரொம்பவே சாதாரணமாக இருப்பதாகத் தென்படும் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, துக்க வீட்டுக்குள் நடக்கும் களேபரக் காட்சிகளில் துள்ளி விளையாடியிருக்கிறது.
அளவெடுத்து தைத்த சட்டை பொருந்திப்போவதைப் போல, மிக நேர்த்தியாகத் திரையில் கதை படர வழியமைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சிவா நந்தீஸ்வரன். கலை இயக்குனர் வீரமணி கணேசனின் பணி, நாமே அந்த கற்பனையான கிராமத்து வீட்டுக்குள் புகுந்த உணர்வைத் தருகிறது.
இன்னும் காஸ்ட்யூம், மேக்கப், ஒலி வடிவமைப்பு என்று சிலாகிக்கப் பல அம்சங்கள் படத்தில் உண்டு.
ஒரு இயக்குனர் என்ற வகையில், இந்த படத்தின் பலமும் பலவீனமும் ராம் சங்கையாவையே சரணடையும். ஆனால், படம் பார்த்து முடிவடையும்போது குறைகளனைத்தையும் நம் மனதில் இருந்து தொலையச் செய்திருக்கிறார் இயக்குனர். இது சிறப்பான படம் எனும் தகுதியை எட்டச் செய்வது அந்த மாயாஜாலம் தான்.
மீந்துபோன அடையாளம்!
மரத்தில், சுவரில், கற்பாறையில், கை உட்பட உடம்பின் சில பாகங்களில் செதுக்கப்படும் பெயர்கள் காலத்தைக் கடந்த காதலின் அடையாளங்களாக மீந்து நிற்கும். இந்த படத்தில் தண்டட்டி அந்த வேலையைச் செய்திருக்கிறது.
படம் பார்த்து முடித்தபிறகு, நாம் பார்த்த சில அற்புதமான காதல் படைப்புகள் நினைவுக்கு வரும். அவற்றின் தாக்கத்தையும் இத்திரைக்கதையில் உணர்வோம். அதனை மீறி, இன்றும் உயிர்ப்போடிருக்கும் சாதீய ஆணவத்திற்கெதிராகக் கல் எறிந்திருக்கிறார் இயக்குனர்.
ஆணவக் கொலைகளின் மீதான விமர்சனமாக இப்படத்தைத் தந்திருக்கிறார். அதனாலேயே, இந்தப் படம் இருட்டடிப்புக்கு ஆளாகலாம். ’ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்று வந்தால் இப்படி ஒரு கதையைப் படமெடுத்திருக்கிறார்களே’என்ற எதிர்க்குரல்கள் பெருகலாம்.
அதையும் மீறி, சமூக நீதியை விரும்புகிற இளைய தலைமுறையினர் இப்படத்தைக் கொண்டாடுவார்கள். ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ’ என்று கையில் ஏந்துவார்கள். நிச்சயம் அது எதிர்க்குரல் எழுப்புவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும்.
இந்த தண்டட்டி வெறும் அணிகலன் அல்ல; காதலைத் தொலைத்துவிட்டோம் என்று ஆயுள் முழுக்கக் கதறியழுத ஒரு பெண்ணின் இதயம்!
உதய்பாடகலிங்கம்
ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
மேற்குவங்கம்: சரக்கு ரயில்கள் விபத்து!