96 தொகுதிகளில் 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
4ஆம் கட்ட தேர்தல் இன்று (மே 13) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எந்தெந்த மாநிலங்களில்
- ஆந்திரப் பிரதேசம் (25),
- தெலுங்கானா (17),
- உத்தரப் பிரதேசம் (13),
- மகாராஷ்டிரா (11),
- மத்தியப் பிரதேசம் (8),
- மேற்கு வங்கம் (8),
- பிகார் (5),
- ஒடிசா (4) மற்றும்
- ஜம்மு காஷ்மீர் (1)
ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கும், ஒடிசாவில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
4 ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 17.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1.92 லட்சம் வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஸ்டார் வேட்பாளர்கள்
இவர்களில் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான கிரிராஜ் சிங் (மேற்கு வங்கம் – பஹரம்பூர்), சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (உபி – கன்னாஜ்), காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (பஹரம்பூர்) மற்றும் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா (கிருஷ்ணாநகர்),
மத்திய அமைச்சரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான அர்ஜுன் முண்டா (குந்தி), திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்ருகன் சின்ஹா (அசன்சோல்), காங்கிரஸின் ஒய்.எஸ். ஷர்மிளா (கடப்பா) உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
வாக்களித்த பிரபலங்கள்…
முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தனது மனைவி உஷாவுடன் வந்து ஜுபிலி ஹில்ஸில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இதே வாக்குச்சாவடியில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் வாக்களித்தனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா தொகுதியின் ஜெயமஹால் அங்கனவாடி வாக்குச் சாவடி எண் 138ல் வாக்களித்தார்.
முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குண்டூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாகை எம்.பி.செல்வராஜ் காலமானார்!
ஹெல்த் டிப்ஸ்: நீச்சலடிக்க போறீங்களா… இதிலெல்லாம் கவனம் தேவை?