டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைவதற்கு குரூப் 2 அணிகளுக்கு இடையேயான உச்சக்கட்ட மோதல்கள் இன்று நடைபெற்றன.
முதலில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தேறின. இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு போட்டியாக நின்ற தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவைப் பறித்தது.
அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா தோல்வியின் மூலம் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்காள தேச அணிகள் மோதின. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி நிச்சயம் அரையிறுதிக்குள் நுழைந்து விடும் என்பதால் போட்டி பலத்த எதிர்பார்ப்புகளோடு தொடங்கியது.
டாஸ் வென்ற வாங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர். லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாகத் தொடர்ந்து விளையாடி வந்த நஜ்முல் ஹாசைன் அரை சதம் அடித்ததும் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை இப்திகார் முகம்மது கைப்பற்றினார்.
சௌமியா சர்க்கார் 20 ரன்கள், ஷகிப் அல் ஹசன் ரன் எதுவும் எடுக்கவில்லை. அஃபிஃப் ஹுசைன் 24 ரன்கள், மொசாடெக் ஹுசைன் 5 ரன்கள், நூருல் ஹசன் ரன் எதுவும் எடுக்கவில்லை என மற்ற அனைவருமே சொதப்ப வங்கதேச அணி 20 ஓவர் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்தது.
தொடர்ந்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பாபர் அசாம் 25 ரன்களும், முகமது ரிஸ்வான் 32 ரன்களும் அடித்தனர். முகமது நவாஸ் 4 ரன் மட்டுமே அடித்தார்.
பாகிஸ்தான் அணியின் சுமாரான ஆட்டம் சிறிது நேரத்திற்கு பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது. அதிரடியாக ஆடிய முகமது ஹாரிஸ் 18 பந்தில் 31 ரன்களையும், ஷான் மசூத் 14 பந்தில் 24 ரன்களையும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி 18.1 ஓவரிலேயே தனது இலக்கை அடைந்து வங்காள தேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் சென்றுள்ளது.
தலா 5 போட்டிகள் கொண்ட சூப்பர் 12 சுற்றின் முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறிவிடும் என்றுதான் பலரும் நினைத்தனர்.
ஆனால் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ கொற்றவா என்று பல அணிகளின் வெற்றி தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதியில் மகிழ்ச்சியுடன் கால் வைத்துள்ளது பாகிஸ்தான்.
இந்த போட்டியில் வங்காள தேச அணிக்கும் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் அனைத்தையும் வீணடித்தது அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போது மீண்டும் கிடைத்துள்ள மிகப்பெரும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி மீண்டும் பாகிஸ்தான் உலகக்கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மோனிஷா
ஆர்.எஸ்.எஸ் பேரணி – பின்வாங்கிய காரணம் இதுதான்: திருமாவளவன்
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி: எடப்பாடி சொன்ன முக்கிய தகவல்!