கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்ற மறுப்பா?: பாமக மா.செ.விளக்கம்!

Published On:

| By Kavi

கோவை பாஜக வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சார பணிகளில் இருந்து பாமக விலகுவதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான மார்ச் 19ஆம் தேதி சேலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கூட்டணி கட்சியினரை ஆதரித்து பாமகவினரும், பாஜகவினரும் அந்தந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடபோவதில்லை என பாமகவினர் அறிவித்ததாக தகவல் வெளியானது.

“வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவுக்கு அழைப்பு இல்லை. வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலக திறப்பு  என எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதி வெளியிடும் நிகழ்ச்சிக்கும் அழைப்பு இல்லை.

கூட்டணி தர்மம் முக்கியம்தான் என்றாலும் அதைவிட சுயமரியாதை முக்கியம். எனவே கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மெளனமாய் வெளியேறுகிறோம்” என்று கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தெரிவித்ததாக தகவல்கள் வந்தன.

இதுதொடர்பாக கோவை ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் கோவை ராஜ் என்கிற ராஜகோபால், நான் சொன்னதாக சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் வரும் செய்திகள் தவறானவை,

வாட்ஸ்அப் தகவல் வைத்து அதை செய்தியாக்கி வெளியிட்டு உள்ளனர். என்.டி.ஏ கூட்டணி சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கோவை பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கோவையில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மீனவர்களுக்காக கடல் ஆம்புலன்ஸ் : ஓபிஎஸ் வாக்குறுதி!

பரத் நடிக்கும் கிரைம் த்ரில்லர்… தலைப்பே வித்தியாசமா இருக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel